• Fri. Apr 19th, 2024

அமெரிக்கா ரஷ்யாவுக்கு இடையே மதில்மேல் பூனையாக இந்தியா

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்காதது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

கடந்த மாதம் 31-ஆம் தேதி உக்ரைன் எல்லையில் ரஷ்யா படைகளை குவித்து வந்தபோது, இந்த விவகாரத்தை ஐ,நா. பாதுகாப்பு கவுன்சில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டுமா என்பது குறித்த வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது. அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் கண்டன அறிக்கைகள் போலல்லாமல், இந்தியாவின் அறிக்கைகளில் சமரசம், “கட்டுப்பாடு,” “விரிவாக்கம்” மற்றும் “ராஜதந்திர உரையாடல்” போன்ற வார்த்தைகள் மட்டுமே இருந்தன. முக்கியமாக, உக்ரைனில் ரஷ்யாவின் நடவடிக்கைகளுக்கு இந்தியா கண்டனம் தெரிவிப்பதை தவிர்த்தது.

உக்ரைன் மீது ரஷ்ய அதிபர் போரை அறிவித்த போதும், இந்தியா நடுநிலை வகிக்கும் என்றே அறிவிக்கப்பட்டது. இது மட்டுமல்லாமல் அமெரிக்காவில் நடைபெற்ற குவாட் நாடுகளின் ஆலோசனையின் போதும், ரஷ்யாவை கண்டிப்பதை இந்தியா லாவகமாக தவிர்த்தது. உக்ரைனில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை விடுதலை பெற்றவையாக புதின் அங்கீகரித்த போதும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் ரஷ்யாவை இந்தியா கண்டிக்கவில்லை. அமெரிக்கா, அல்பேனியா நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக வெள்ளிக்கிழமை கொண்டு வந்த தீர்மானத்தையும் இந்தியா ஆதரிக்கவில்லை

பொறுப்பான சக்தி என கூறிக்கொள்ளும் ஒரு நாடு, அமைதியை சீர்குலைக்கும் ரஷ்யாவின் நடவடிக்கைகளை எப்படி கண்டிக்காமல் இருக்கலாம் என கேள்வி எழுந்துள்ள நிலையில், இந்தியாவின் மதில் மேல் பூனை என்ற நிலைப்பாடு அமெரிக்காவுடனான உறவுக்கு குந்தகம் விளைவிக்கும் என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
அமெரிக்கா, ரஷ்யா என்ற இரு நட்பு நாடுகளுக்கு இடையே சிக்கிக் கொண்டிருப்பதாலேயே இந்தியா மதில் பூனை போல நிற்கிறது. ரஷ்யா இந்தியாவின் நீண்ட கால நட்பு நாடு மட்டுமல்லாமல், ராணுவத்திற்கான ஆயுத விநியோகத்தில் முதன்மையானதும் கூட. உலக அளவில் பெரும் சக்தியாக விளங்கும் சீனாவை எதிர்கொள்ள அமெரிக்காவின் நட்பு அவசியம் என்ற சூழலும் உள்ளது.

கிழக்கு ஐரோப்பாவில் தற்போது நிலவும் போர் சூழல், எந்த வகையில் பார்த்தாலும் சீனாவுக்கே பெரும் ஆதாயமாக இருக்கும். இந்தோ பசிபிக் பிராந்தியத்திலிருந்து அமெரிக்கா தனது கவனத்தை ஐரோப்பா பக்கம் திருப்பும் கட்டாயத்தில் உள்ளது. இது சீனாவுக்கே பயனளிப்பதாக அமையும்.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலும் கிளர்ச்சியாளர்களை அங்கீகரித்ததும், தவறான முன் உதாரணத்தை மற்ற நாடுகளுக்கு அளிக்கும் அபாயமும் உள்ளது. ரஷ்யாவின் சூத்திரத்தை சீனா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் பின்பற்றினால், அது இந்தியாவுக்கே கேடு விளைவிக்கும். ரஷ்யாவின் இதே மூலோபாயத்தை பயன்படுத்தி தான் 1999- ஆம் ஆண்டு செர்பியாவிலிருந்து கோசோவாவை அமெரிக்க பிரித்தது.

ரஷ்யாவின் பாதுகாப்புக்கு ஆதரவு தெரிவிக்கும் அதே வேளையில், உக்ரைனின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடுக்கு ஆதரவான நிலையை இந்தியா எடுக்கலாம் என்பது அரசியல் நோக்கர்களின் யோசனையாக உள்ளது. இதன்மூலம், அமெரிக்கா, ரஷ்யா என்ற இரு வல்லரசுகளின் நட்பை இந்தியா தக்க வைத்துக்கொள்ளலாம் என்பதும் அவர்களின் கூற்றாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *