

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 840 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 66,720 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.இதனால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சர்வதேச பொருளாதாரச் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை தினந்தோறும் நிர்ணயிக்கப்படுகிறது. இந்த சூழலில் அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற நிலையில் பங்குச்சந்தைகளில் திடீர் சரிவு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி தங்கத்தில் அதிக முதலீடு செய்யத் தொடங்கியுள்ளனர். இதனால் தேவை அதிகரித்து தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. கடந்த 20-ம் தேதி தங்கம் விலை இதுவரை இல்லாத உச்சமாக 66,480 ரூபாய் என்ற நிலையை அடைந்தது.

அதன் பின்னர், கடந்த 21-ம் தேதியில் இருந்து குறைந்து வந்த தங்கம் விலை, நேற்று முன்தினம் அதிகரித்தது. அதனைத் தொடர்ந்து நேற்றும் விலை உயர்ந்து ஒரு சவரன் 65,880 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 840 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 66,720 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு 105 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 8,340 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். வெள்ளி விலையும் கிராமுக்கு 3 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 114 ரூபாய்க்கும், ஒரு கிலோ 1 லட்சத்து 14 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.

