அ.தி.மு.க-வை மீட்டெடுப்பதே லட்சியம்’ என்கிற முழக்கத்தோடு டி.டி.வி தினகரனால் தொடங்கப்பட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் இன்று ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
2018, மார்ச் 15-ம் தேதி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார் டி.டி.வி.தினகரன். ஒருபுறம் தமிழக சட்டமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்ய நிதியமைச்சர் பன்னீர்செல்வம் தயாராகிக் கொண்டிருக்க மறுபுறம் மதுரை மாவட்டம் மேலூரில் நடந்த பிரமாண்டபொதுக்கூட்டத்தில் கட்சியின் பெயர் மற்றும் கொடியை அறிவித்தார் தினகரன். முதன்முறையாக 2019-ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட அந்தக் கட்சி கிட்டத்தட்ட ஆறு சதவிகித வாக்குகளைப் பெற்று அதிமுகவினருக்கு அதிர்ச்சி கொடுத்தது.
காரணம், சிதம்பரம், ராமநாதபுரம் உள்ளிட்ட தொகுதிகளில் அதிமுகவின் வெற்றியை மடைமாற்றியது அமமுக. தொடர்ந்து நடந்த 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும் கணிசமான வாக்குகளைப் பெற்றது அ.ம.மு.க. குறிப்பாக, ஆண்டிபட்டி, பெரியகுளம், திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளில் அ.தி.மு.கவின் வெற்றியை மடைமாற்றியது அமமுக.
அதேபோல, 27 மாவட்டங்களுக்கு நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும், கண்ணங்குடி, கயத்தாறு ஒன்றியங்களைக் கைப்பற்றியது.
கட்சி ஆரம்பிக்கும் முன்னேரே திமுக அதிமுக இரண்டு அணிகளாக பிரிந்து போட்டியிட்ட போது கூட சுயேட்சையாக நின்று ஆர் கே நகரில் வெற்றி பெற்றவர் டிடிவி தினகரன். 20 ரூபாய் டோக்கன் பார்முலா அங்கிருந்து தான் தொடங்கியது என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிச்சாமி இணைப்பிற்கு பிறகு அதிமுகவின் அதிருப்தி ஓட்டுக்களை அதிருப்தியாளர்களை தன் பக்கம் இழுத்துகொண்டார் டிடிவி தினகரன். அப்படி சென்றவர்களில் வெற்றிவேல் , தங்கதமிழ்ச் செல்வன் , செந்தில்பாலாஜி ஆகியோர் அடங்குவர். பிறகு தங்க தமிழ் செல்வன் , செந்தில்பாலாஜி இருவரும் திமுகவில் இணைந்து ஒரு முக்கிய பொறுப்பில் தலைமைக்கு நெருக்கமான இடத்தில் இருக்கின்றனர்.
ஆரம்ப கட்டத்தில் அமமுக வேகத்தை கண்டு அதிமுகவினர் மட்டுமல்ல மற்ற கட்சியினரும் சற்று பயந்தார்கள். காரணம் இரட்டை இலை சின்னம் எங்களுடையது, உண்மையான அதிமுக நாங்கள் தான் என தமிழகம் முழுவதும் முழங்கிய குரல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதன் பிறகு அமமுகவின் எழுச்சியால் பாதிப்புஏற்படுமா என்ற எண்ணத்தில் பாஜகவின் உதவியுடன் தன்னுடைய ஆடுபுலி ஆட்டத்தை தொடங்கியது அதிமுக.
டிடிவி தினகரனுக்கு இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக லஞ்சம் கொடுத்தார் என்ற வழக்கு அவர் மீது பாய்கிறது.இன்று வரை அந்த வழக்கு நிலுவையில் தான் உள்ளது. இதன் காரணமாகவே டிடிவியின் அதிரடி ஆக்சன் கொஞ்சம் அமைதியாக இருந்தது.
கட்சியில் ஒருங்கிணைப்பு இல்லை, அது சரி இல்லை இது சரி இல்லை என்ற சலசலப்பு ஏற்பட்டது. 2021 தேர்தலில் கூட பாஜக அமமுக அதிமுக இணைப்பு ஏற்படுத்தி கூட்டணி வைக்கவும் அமமுக தயாராக இருந்தது. டெல்டா பகுதியில் அமமுகவும் கொங்கு பகுதிகள் மற்ற பகுதியில் பாஜக சரி சமமாக பிரித்து கொள்ளாலாம் என பேச்சு வார்த்தை நடந்ததாகவும் , அதன் பிறகு தேர்தல் செலவுகளை அமமுக கவனித்து கொள்ள வேண்டும் பாஜக உத்தரவிட, டிடிவி தினகரன் சசிகலாவிடம் இது குறித்து பேசியதாகவும் அப்போது சசிகலா கோவத்துடன் பேசியதால் தான் இன்று வரை இருவருக்குமிடையே மனகசப்பு உருவாகி உள்ளதாகவும் கூறுகின்றனர்.
அந்த விரக்தியில் அமமுக சம்மந்தம் இல்லாத ஒரு கூட்டணியை உருவாக்கி சீட்டுகளை வாரி வழங்கியது. கட்சியில் நிதி பற்றாக்குறை சசிகலா வெளியே வந்த பிறகும் அவரும் பாஜகவின் கட்டுப்பாட்டுக்குள் வரவும் டிடிவி தினகரனுக்கு கொஞ்சம் நெஞ்சமாக இருந்த நம்பிக்கையும் கைவிட்டு போனது. பிறகு கட்சியினர் கொத்து கொத்தாக விலகினர். பலர் மீண்டும் தாய் கழகமான அதிமுகவில் இணைந்தனர். அப்போது கூட அங்கு சென்று என்ன செய்ய போகிறீர்கள் திமுகவில் இணைந்தாவது நீங்கள் உங்களை பார்த்துக்கொள்ளுங்கள் என ஆசி வழங்கி அனுப்பி வைத்தார்.
இந்த ஐந்து ஆண்டுகளில் ஆரம்ப வேகம் படிப்படியாக குறைய தற்போது நல்ல வாய்ப்பை தவறவிட்டவர்கள் பட்டியலில் வைகோ , விஜயகாந்த் ஆகியோருடன் டிடிவியும் இணைகிறார்.