• Wed. Feb 4th, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

ஆணாக மாறி பெண்ணை காதலித்த வழக்கில்..,
அதிரடி தீர்ப்பு வழங்கிய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை..!

Byவிஷா

Jul 30, 2022

ஆணாக மாறிய பெண்ணை காதலித்த பெண்ணை, பெண்ணின் குடும்பம் கடத்திச் சென்றது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடியான தீர்ப்பை வழங்கியுள்ளது.
விருதுநகரைச் சேர்ந்த ஆணாக மாறிய பெண் ஒருவர், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் ஆட்கொணர்வு மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், எனக்கும் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மற்றொரு பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டது. கடந்த ஒரு ஆண்டாக இருவரும் காதலித்து வந்தோம். கடந்த 7 ஆம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டோம்.
இந்நிலையில் அந்த பெண்ணின் குடும்பத்தினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, ஜூலை 16 ஆம் தேதி நாங்கள் வசித்து வந்த வீட்டிற்குள் புகுந்து இருவரையும் தாக்கியதோடு, அப்பெண்ணை கடத்திச் சென்று விட்டனர். அவரை மீட்டுத் தரக்கோரி காவல்துறையினரிடம் புகார் அளித்தும், எவ்வித நடவடிக்கையும் இல்லை.
தன்பாலின உறவை ஏற்காமல், அதனை மாற்றுவதாகக் கூறி அப்பெண்ணிற்கு சிகிச்சை வழங்குவதாகச் சொல்லி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து வருகின்றனர். இதனால் அவரது உடல் நலம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. அதோடு அப்பெண்ணின் சகோதரர் தன்பாலின உறவை விட்டுவிடுமாறு வலியுறுத்தி, அவரை கடுமையாக தாக்கியுள்ளார். என்னையும் மிரட்டினார்.
வத்தலகுண்டு துணை காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தும், தற்போது வரை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்யவில்லை. அப்பெண்ணின் உயிருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படக்கூடாது. ஆகவே பெண்ணை மீட்டு நேரில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக்கிளையின் நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு, “மனுதாரரின் தோழி 21 வயது நிரம்பியவர். ஆகவே அவரது விருப்பப்படி செல்ல அனுமதிக்க வேண்டும்” என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.