கோவையில் 1 லட்சத்து 7 ஆயிரம் பேருக்கு ரூ.588 கோடியில் நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
வழங்கினார்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முதல் 3 நாட்கள் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அரசு விழா மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இதற்காக அவர் நேற்று இரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை சென்றார். இன்று காலை கோவை ஈச்சனாரி அருகே தனியார் கல்லூரிக்கு எதிரே உள்ள மைதானத்தில் அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
அங்கு மிகப் பிரமாண்டமாக நடந்த அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். பல்வேறு துறைகளின் சார்பில் 1 லட்சத்து 7 ஆயிரத்து 62 பேருக்கு ரூ.588 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மு.க.ஸ்டாலின் வழங்கினார். இந்தியாவிலேயே 1 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு ஒரே நேரத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்குவது இதுவே முதல்முறையாகும். தொடர்ந்து பல்வேறு அரசு துறைகள் சார்பில் ரூ.272 கோடி மதிப்பில் முடிவுற்ற திட்ட பணிகளை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இதேபோல் ரூ.663 கோடி மதிப்பில் 748 புதிய திட்டங்களுக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். விழா நடைபெறும் ஈச்சனாரியில் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டிருந்தது.