இன்று தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை தேரோட்டம் நடைபெறுவதையொட்டி, ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழாவை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் இக்கோவிலுக்கு வருகை புரிவர். அந்த வகையில் சித்திரை திருவிழா கடந்த 17ஆம் தேதி பந்தக்கால் நடும் விழாவுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் மே 1ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலில் தேரோட்டம் தொடங்கி நடைபெற்றுள்ளது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டுள்ளனர். தியாகராஜரும், கமலாம்பாள் எழுந்தருளிய தேரை திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். அரோகரா கோஷத்துடன் தஞ்சாவூர் பெருவுடையார் திருத்தேரோட்டம் பரவசத்துடன் நடைபெற்றது. இறுதி நாளான மே ஐந்தாம் தேதி தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அன்றைய நாள் வரை இரவில் சுவாமி ஊர்வலமும், திருமுறை பண்ணிசை நிகழ்ச்சியும், பரதநாட்டிய நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.