நற்றிணைப்பாடல்: 374
முரம்பு தலை மணந்த நிரம்பா இயவின்
ஓங்கித் தோன்றும் உமண் பொலி சிறுகுடிக்
களரிப் புளியின் காய் பசி பெயர்ப்ப,
உச்சிக் கொண்ட ஓங்கு குடை வம்பலீர்!
முற்றையும் உடையமோ மற்றே – பிற்றை வீழ் மா மணிய புனை நெடுங் கூந்தல்,
நீர் வார் புள்ளி ஆகம் நனைப்ப,
விருந்து அயர் விருப்பினள் வருந்தும்
திருந்துஇழை, அரிவைத் தேமொழி நிலையே?
பாடியவர்: வன் பரணர் திணை: முல்லை
பொருள்:
பரல் நிரம்ப மேலே பொருந்திய சென்று சேர்தற் கியலாத நெறியில் உயர்ந்து தோன்றும் உப்பு வாணிப மக்கள் நிறைந்திருக்கின்ற சிறிய குடிகளையுடைய; களர்நிலத்தில் விளைந்த புளியின் கனியைச் சுவைத்து உண்டு நும்மை வருத்துகின்ற பசியைப் போக்குதலானே; மீட்டும் நெறியிலே செல்லும் வன்மை மிக்குடையீராய் உச்சி மேற் கொண்ட உயர்ந்த குடையையுடைய புதிய மாந்தர்காள்; இது காறும் பிரிந்ததனால் பிரியும் பொழுதின்றி அதன்பின்பு வருந்திக் கண்ணீர் வடிந்து விழுதலாலாகிய புள்ளி கொங்கையை நனையா நிற்ப; யாம் புதியேமாகி வருதலின் எமக்கு விருந்து செய்யும் விருப்பினளாய்; அட்டிற்சாலை புகுந்து உணவு அமைக்குந் தொழிலில் வருந்துகின்ற விரும்பிய கரிய மணியின் தன்மையுடைய அலங்கரித்த நெடிய கூந்தலையும் திருந்திய கலன்களையும்; இனிய மொழியையுமுடைய மடந்தையினிலையை இதன்முன்பும் இவ்வாறிருக்க முழுதும் பெற்றுடையேமோ? இல்லைகண்டீர்! இப்பொழுதுதான் பெறலாகியதே! இஃதென்ன வியப்பு.