• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

இலக்கியம்:

Byவிஷா

Nov 15, 2023

நற்றிணைப் பாடல் 300:

சுடர்த் தொடிக் கோமகள் சினந்தென, அதன் எதிர்
மடத் தகை ஆயம் கைதொழுதாஅங்கு,
உறு கால் ஒற்ற ஒல்கி, ஆம்பல்
தாமரைக்கு இறைஞ்சும் தண் துறை ஊரன்
சிறு வளை விலை எனப் பெருந் தேர் பண்ணி, எம்
முன் கடை நிறீஇச் சென்றிசினோனே!
நீயும், தேரொடு வந்து பேர்தல் செல்லாது,
நெய் வார்ந்தன்ன துய் அடங்கு நரம்பின்
இரும் பாண் ஒக்கல் தலைவன்! பெரும் புண்
ஏஎர் தழும்பன் ஊணூர் ஆங்கண்,
பிச்சை சூழ் பெருங் களிறு போல, எம்
அட்டில் ஓலை தொட்டனை நின்மே.

பாடியவர் : பரணர்
திணை : மருதம்

பொருள் :
சுடரும் வளையல் அணிந்த அரசி சினம் கொண்டாள் என்று அடக்கமுடைய ஆயத்தார் அவளைக் கைதொழுது நிற்பது போல, பெருங்காற்று அடித்தது என்று தாமரைப் பூவை ஆம்பல் பூக்கள் தொழும் குளிர்ந்த நீர்த்துறையினை உடையவன் நீ. என் தலைவியை மணந்துகொள்ள விரும்பியவர்கள் அவள் வளையல் செய்து அணிந்துகொள்ளட்டும் என்று தன் தேரை ஓட்டிவந்து இவள் வீட்டு வாயிலில் பரிசப் பொருளாக நிறுத்திவிட்டுச் சென்றுள்ளனர். நீயும் உன் தேரில் வா. திரும்பிச் செல்லாதே. இவள் வீட்டுச் சமையலறையில் (அட்டில்) இருக்கும் கஞ்சியை ஓலைக்குடையில் வாங்கிக் குடித்துக்கொண்டு இவளது பெற்றோர் திருமணம் செய்து தரும்வரையில் காத்திரு. நெய் ஒழுகுவது போன்ற நரம்புள்ள யாழில் இசை கூட்டும் பாணர்களின் தலைவன் அரசன் தழும்பன். அவனது நகரம் ஊணூர். அந்த ஊரில் பழக்கிய ஆண்யானை இல்லந்தோறும் பிச்சை எடுக்கும். அந்த யானை போல இவள் இல்லத்துக்கு வருக. இப்படிச் செய்தால் தன் தலைவியைப் பெறலாம் என்று தோழி தலைவனுக்குச் சொல்கிறாள்.