நற்றிணைப் பாடல் 299:
உரு கெழு யானை உடை கோடு அன்ன,
ததர் பிணி அவிழ்ந்த தாழை வான் பூ,
தயங்கு இருங் கோடை தூக்கலின், நுண் தாது
வயங்கு இழை மகளிர் வண்டல் தாஅம்
காமர் சிறுகுடி புலம்பினும், அவர்காண்:
நாம் இலம் ஆகுதல் அறிதும் மன்னோ
வில் எறி பஞ்சி போல, மல்கு திரை
வளி பொரு வயங்கு பிசிர் பொங்கும்
நளி கடற் சேர்ப்பனொடு நகாஅ ஊங்கே.
பாடியவர் : வடம வண்ணக்கன் பேரிசாத்தனார்
திணை : நெய்தல்
பொருள்:
அச்சம் தரும் யானையின் உடைந்த தந்தம் போல மலர்ந்திருக்கும் தாழம்பூவின் மடல் வாடைக்காற்று வீச்சில் மகளிர் வண்டல் விளையாடும் களத்தில்
வந்து விழும் ஊர் நம் ஊர். இந்த ஊரே என்னைக் கைவிட்டுத் தனிமைப்படுத்தினாலும், அவர்தான் எனக்குத் துணை. அவரும், நான் இல்லாமல் தான் இல்லை என்று வாழ்பவர் என்று தெரிந்துகொண்டேன். வில்லால் அடித்த பஞ்சு போல அலைநுரை பொங்கும் குளிர்ந்த கடல்நிலத் தலைவனாகிய சேர்ப்பன் அவன். அவனோடு சிரித்துக்கொண்டு விளையாடாவிட்டால் நான் இருக்கமாட்டேன். தலைவி தோழியிடம் இவ்வாறு கூறுகிறாள்.