• Fri. Jan 24th, 2025

இலக்கியம்

Byவிஷா

Dec 29, 2024

நற்றிணைப்பாடல் : 400

வாழை மென் தோடு வார்புஉறுபு ஊக்கும்
நெல் விளை கழனி நேர் கண் செறுவின்,
அரிவனர் இட்ட சூட்டு அயல், பெரிய
இருஞ் சுவல் வாளை பிறழும் ஊர!
நினின்று அமைகுவென்ஆயின், இவண் நின்று இன்னா நோக்கமொடு எவன் பிழைப்பு உண்டோ?
மறம் கெழு சோழர் உறந்தை அவையத்து,
அறம் கெட அறியாதாங்கு, சிறந்த
கேண்மையொடு அளைஇ, நீயே
கெடு அறியாய் என் நெஞ்சத்தானே

பாடியவர் : ஆலங்குடி வங்கனார் திணை : மருதம்

பொருள்:

வாழையின் மெல்லிய தாற்றின் நுனியில் நாலும் பூவை நிலத்தினின்று ஓங்கி வளர்ந்துற்று அசையச் செய்கின்ற; நெற்கதிர் விளையாநின்ற வயலிலே கண்ணுக்கு இனிய சேற்றில்; கதிரறுக்கும் மள்ளர் அறுத்துப் போகட்ட அரிச்சூட்டின் பக்கத்தில்; பெரிய கரிய பிடரையுடைய வாளைமீன் பிறழாநிற்கும் ஊரனே! நீயின்றி யான் பொருந்தியிருப்பேனாயின்; இங்கு நின்று இனிமையைத் தராத நோக்கத்துடனே என்ன பிழைப்புண்டு? யாதுமில்லை! ஆதலின் மறம் பொருந்திய சோழரது உறையூர்க்கண் அவைக்களத்து; அறம் கெடவறியாது நின்று நிலைபெற்றாற் போன்று; நீதான் சிறந்த நட்புடனே அளாவி என்னெஞ்சினின்று நீங்குந் தன்மையைக் கற்றறிந்தா யல்லை! அதனால் நீ உளனாயிருப்பின் யான் உளனாவேன் காண்!