நற்றிணைப் பாடல் 395:
யாரை, எலுவ? யாரே, நீ எமக்கு
யாரையும் அல்லை; நொதுமலாளனை;
அனைத்தால் கொண்க, நம்மிடையே நினைப்பின்;
கடும் பகட்டு யானை நெடுந் தேர்க் குட்டுவன்
வேந்து அடு மயக்கத்து முரசு அதிர்ந்தன்ன,
ஓங்கற் புணரி பாய்ந்து ஆடு மகளிர்
அணிந்திடு பல் பூ மரீஇ, ஆர்ந்த
ஆ புலம் புகுதரு பேர் இசை மாலைக்
கடல் கெழு மாந்தை அன்ன, எம்
வேட்டனை அல்லையால், நலம் தந்து சென்மே.
பாடியவர் : அம்மூவனார்
திணை: நெய்தல்
பாடலின் பொருள்:
நண்பரே (எலுவ), யார் நீ? என் தலைவிக்கு என்ன உறவு? எந்த உறவுக்காரரும் இல்லை. ஏதோ உறவோ, பகையோ இல்லாத ஒரு நொதுமலாளர். அவ்வளவுதான், கொண்கனே (கொண்டிருப்பவன்). நினைத்துப் பார்த்தால் நம்மிடையே இருக்கும் உறவு அவ்வளவுதான். யானைமீதும் தேர்மீதும் செல்லும் வேந்தன் குட்டுவன். அவன் பிற வேந்தர்களை அழிக்கும் போர்முகத்தில் முரசு அதிர்வது போல, உயர்ந்த பாறைக்கல்லின்மீது ஏறி, கடலில் குதித்து மகளிர் விளையாடுவர். அப்போது அவர்கள் முன்பு அணிந்திருந்த பூக்களைக் களைந்து எறிந்துவிட்டு விளையாடுவர். அப்படி அவர்கள் எறிந்த பூக்களை மேய்ந்துவிட்டுப் பசுவினம் மாலை வேளையில் இல்லம் மீளும். அந்த மாலை வேளையிலும் நீ என் தலைவியை விரும்பவில்லை. (வேட்டனை அல்லை). இந்த நிலையில் இவளை விட்டுவிட்டு நீ செல்வதாயின், இவளது பண்டைய உடல் நலத்தைத் தந்துவிட்டுச் செல்க. இவளை மணந்து மனைவியாக்கிக்கொண்டு செல்க.
தோழி தலைவனிடம் இவ்வாறு கூறுகிறாள்.