நற்றிணைப் பாடல் 396:
பெய்து போகு எழிலி வைகு மலை சேர,
தேன் தூங்கு உயர் வரை அருவி ஆர்ப்ப,
வேங்கை தந்த வெற்பு அணி நல் நாள்,
பொன்னின் அன்ன பூஞ் சினை துழைஇ,
கமழ் தாது ஆடிய கவின் பெறு தோகை
பாசறை மீமிசைக் கணம் கொள்பு, ஞாயிற்று
உறு கதிர் இள வெயில் உண்ணும் நாடன்!
நின் மார்பு அணங்கிய செல்லல் அரு நோய்
யார்க்கு நொந்து உரைக்கோ யானே பல் நாள்
காமர் நனி சொல் சொல்லி,
ஏமம் என்று அருளாய், நீ மயங்கினையே?
பாடியவர் : ஆசிரியர் அறியப்படவில்லை.
திணை : குறிஞ்சி
பொருள்:
மழை பொழிந்த பின்னர் மேகம் மலையில் இறங்கிவிடும். அதனால் தேன் தொங்கும் உயர்ந்த மலையில் அருவி முழக்கத்துடன் கொண்டும். வேங்கை மலர் மலையெல்லாம் பூத்துக் குலுங்கும். பொன் போன்ற அதன் பூக்களை மயில் உண்ணும். அப்போது வேங்கைப் பூவின் தாதுகள் மயிலின் தோகையில் கொட்டி மணக்கும். இப்படி மணக்கும் தோகையுடன் மயில்கள் கூட்டமாக பாறைமேல் இருந்துகொண்டு காலையில் தோன்றும் ஞாயிற்றின் இளவெயிலை உண்ணும். (ஞாயிறு காயும்). இப்படிப்பட்ட நாட்டின் தலைவனே! உனது அன்பை எனக்குத் தந்தாய். அதனால் உன் நினைவுத் துன்பத்தில் நான் தவிக்கிறேன். இதனை வேறு யாரிடம் சொல்லமுடியும்? உனது அளவில்லா அன்பினால் என்னை மயக்கிவிட்டாய்.