நற்றிணைப் பாடல் 397:
தோளும் அழியும், நாளும் சென்றென்
நீள் இடை அத்தம் நோக்கி, வாள் அற்றுக்
கண்ணும் காட்சி தௌவின் என் நீத்து
அறிவும் மயங்கி, பிறிது ஆகின்றே;
நோயும் பெருகும்; மாலையும் வந்தன்று;
யாங்கு ஆகுவென்கொல் யானே? ஈங்கோ
சாதல் அஞ்சேன்; அஞ்சுவல், ”சாவின்
பிறப்புப் பிறிது ஆகுவது ஆயின்,
மறக்குவேன்கொல், என் காதலன்” எனவே.
பாடியவர் : அம்மூவனார்
திணை : பாலை
பொருள்:
என் தோளின் அழகு அழிகின்றது. அவன் தொடர்பு இல்லாமல் பல நாட்கள் சென்றுவிட்டன. அவன் வரும் நீண்ட வழியையே பார்த்துக்கொண்டிருந்து என் கண்ணின் பார்வையும் ஒளி இழந்து பூத்துப்போயிற்று. (மங்கிப்போயிற்று) அவனை விட்டுவிட்டு என் அறிவும் மயங்கி வேறொன்றாக (பித்து) மாறிவிட்டது. காம வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. காமம் தோன்றும் மாலைக் காலமும் வந்துவிட்டது. நான் என்ன ஆவேனோ தெரியவில்லை. இந்தப் பிறவியில் நான் சாவதற்கு அஞ்சவில்லை. இந்தப் பிறவியில் அவனைக் கணவனாக அடையாமல் செத்துவிட்டால், அடுத்தப் பிறவியில் வேறொரு பிறவியில் தோன்றி, இப்போதுள்ள என் காதலனை மறந்துவிடுவேனோ என்று அஞ்சுகிறேன். தலைவி தன் தோழியிடம்
இவ்வாறு கூறுகிறாள்.