நற்றிணைப் பாடல் 31:
மா இரும் பரப்பகம் துணிய நோக்கி,
சேயிறா எறிந்த சிறு வெண் காக்கை
பாய் இரும் பனிக் கழி துழைஇ, பைங் கால்
தான் வீழ் பெடைக்குப் பயிரிடூஉ, சுரக்கும்
சிறு வீ ஞாழல் துறையுமார் இனிதே;
பெரும் புலம்பு உற்ற நெஞ்சமொடு, பல நினைந்து,
யானும் இனையேன்- ஆயின், ஆனாது
வேறு பல் நாட்டில் கால் தர வந்த
பல உறு பண்ணியம் இழிதரு நிலவுமணல்
நெடுஞ் சினைப் புன்னைக் கடுஞ் சூல் வெண் குருகு
உலவுத் திரை ஓதம் வெரூஉம்
உரவு நீர்ச் சேர்ப்பனொடு மணவா ஊங்கே.
பாடியவர் நக்கீரனார்
திணை நெய்தல்
பொருள்:
தலைவனுடன் பழகுவதற்கு முன்பு கழிமுகத் துறை எனக்கு இனிதாகத்தான் இருந்தன. ஆனால், இப்போது பலவாறாக நினைந்து வருந்துகிறேன். உன்னை இப்போது ஏற்றுக்கொள்ள மாட்டேன். அவன் துறை பெரிய கடல்-பரப்பில் வாழும் இறால் மீன்களைக் கவர்ந்துகொண்ட கடல்-வெண்-காக்கை பனி பொழியும் உப்பங்கழியில் மேயும் தன் பெண்-காக்கையை அழைத்து ஞாழல் மரத்தடித் துறையில் இருந்துகொண்டு ஊட்டும் துறைக்கு அவன் தலைவன். பல்வேறு நாடுகளிலிலுந்து காற்றுப்டகுகளில் கொண்டுவரப்பபட்டுப் பலவாகப் பெருகிக் கிடக்கும் பல்வகைப் பண்டங்கள் இறக்கப்பட்டு நிலாப் போன்ற வெண்மணலில் கிடக்கும் துறை அது. புன்னை மரத்தின் உயர்ந்த கிளையில் அமர்ந்திருக்கும் சூலுற்ற வெண்குருகு அலைவந்து மோதும்போதெல்லாம் அஞ்சி வெறுக்கும் துறை அது. அந்த அவரது துறைப்பக்கம் செல்வதே இப்போது எனக்குத் துன்பமாகிவிட்டது.