

நற்றிணைப் பாடல் 30:
கண்டனென்- மகிழ்ந!- கண்டு எவன்செய்கோ?-
பாணன் கையது பண்புடைச் சீறியாழ்
யாணர் வண்டின் இம்மென இமிரும்,
ஏர்தரு தெருவின், எதிர்ச்சி நோக்கி, நின்
மார்பு தலைக்கொண்ட மாணிழை மகளிர்
கவல் ஏமுற்ற வெய்து வீழ் அரிப் பனி-
கால் ஏமுற்ற பைதரு காலை,
கடல்மரம் கவிழ்ந்தெனக் கலங்கி, உடன் வீழ்பு,
பலர் கொள் பலகை போல-
வாங்கவாங்க நின்று ஊங்கு அஞர் நிலையே.
பாடியவர் கொற்றனார்
திணை மருதம்
பொருள்:
தலைவனே, உன்னைக் கண்டேன் மகிழ்நனே! கண்டு நான் என்ன செய்வேன்! பாணன் கையிலுள்ள பண்புடைய சீறியாழ், புதுவண்டைப் போல இம்மென்று ஒலிக்கின்ற (அந்த) அழகிய தெருவில் உன் வருகையை எதிர்நோக்கி ஏற்கெனவே உன் மார்பைத் தழுவிய, மாண்புடைய நகையை அணிந்த பரத்தை மகளிர் கவலை அதிகமாகிச் சூடான கண்ணீர் வடித்தனர்! காற்று சுழன்றடித்ததால் துன்பப்பட்ட காலத்தில் கப்பல் கவிழ்ந்தது. கலங்கிய பயணிகள் கப்பலுடன் தண்ணீரில் வீழ்ந்தனர்; தத்தளிக்கும் பலர் இழுக்கும் அங்கு மிதந்த ஒரு பலகைபோல உன்னை அந்த மகளிர் பலரும் திரும்பத் திரும்ப இழுத்ததையும், அதனால், அங்கு நீ பட்ட துன்ப நிலையையும் பார்த்தேனே! என்று பரத்தையருடன் இருந்து களித்துவிட்டு, அவர்களைப் பிரிந்து ஒன்றுமறியாதவன்போல் வந்து நின்ற தலைவனிடம் தோழி கூறுகிறாள்.

