• Thu. Apr 25th, 2024

புறக்கணிக்கப் படும் தமிழகம் மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறுகிறது கேரளா வழியாக சுற்றுப்பாதையில் ஜல்பைகுரி – கன்னியாகுமரி சிறப்பு ரயில்

Byத.வளவன்

Nov 5, 2021

அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள கவுகாத்தியை தலைமையிடமாக கொண்ட வடகிழக்கு எல்லை ரயில்வே மண்டலம் சார்பாக நியூ ஜல்பைகுரி – கன்னியாகுமரி சிறப்பு ரயிலை அறிவித்துள்ளது. இந்த ரயில் நியூ ஜல்பைகுரியிலிருந்து நவம்பர் 5ம் தேதி வெள்ளிக்கிழமை புறப்பட்டு மால்டா டவுன், புவனேஸ்வர், விசாகப்பட்டினம், காட்பாடி, சேலம், கோயம்புத்தூர், பாலக்காடு, எர்ணாகுளம், கொல்லம், திருவனந்தபுரம் வழியாக கன்னியாகுமரிக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணிக்கு கன்னியாகுமரி வந்தடைகின்றது. பின்னர் இந்த ரயில் நாகர்கோவில் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நிறைவு பெற்றதும் நவம்பர் 8-ம் தேதி திங்கள்கிழமை மாலை 17:30 மணிக்கு கன்னியாகுமரியிலிருந்து புறப்பட்டு கேரளா வழியாக சென்று வியாழக்கிழமை நியூ ஜல்பைகுரி சென்றடைகிறது. இந்த ரயில் கேரளா பயணிகளுக்காக கன்னியாகுமரியிலிருந்து சுற்றுப்பாதையில் இயக்கப்படுகின்றது. கன்னியாகுமரி மாவட்டம் அரசியல் நிர்வாகத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் கீழ் உள்ள மாவட்டம். இந்த மாவட்ட பயணிகளுக்கு அதிக அளவில் ரயில்கள் தங்கள் மாநிலத்திற்கு உட்பட்ட பகுதிகள் வழியாக அதாவது திருநெல்வேலி, மதுரை வழியாக இயக்கப் பட வேண்டும்.

தென்மாவட்டங்களுக்கு ஒரே ஒரு வாராந்திர ரயில்

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இருந்து ஒரிசா, ஆந்திரா மாநிலத்தில் உள்ள வடகிழக்கு பகுதிகள் அதாவது விசாகப்பட்டினம், மேற்கு வங்காளம், அஸ்ஸாம், அருணாச்சல் பிரதேசம், நாகாலாந்து, மணிப்பூர், மிசரோம் போன்ற மாநிலங்களுக்கு செல்ல ஒரே ஒரு வாராந்திர ரயிலாக கன்னியாகுமரி – ஹவுரா வாராந்திர ரயில் சேவை மட்டுமே உள்ளது. இதனால் இந்த பகுதி பயணிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். கன்னியாகுமரியிலிருந்து கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. அதன்படி திருச்சி -ஹவுரா வாரம் இருமுறை, விழுப்புரம் – புருலியா வாரம் இருமுறை, விழுப்புரம் – காரக்பூர் வாராந்திர ரயில் ஆகிய ரயில்களை தமிழகத்தின் கடைசி எல்லையான கன்னியாகுமரியிலிருந்து இயக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

பராமரிப்பு

இந்த நியூ ஜல்பைகுரி – கன்னியாகுமரி சிறப்பு ரயிலுக்கு நாகர்கோவில் ரயில் நிலையத்தில் வைத்து இரண்டாம் கட்ட பிட்லைன் பராமரிப்பு செய்யப்படுகிறது. இதனால் நாகர்கோவில் ரயில் நிலையத்தில் பிட்லைன் பராமரிப்பு இட நெருக்கடி ஏற்படுகிறது. இவ்வாறு பிட்லைன் பராமரிப்பு இடநெருக்கடி ஏற்பட்டால் தென்மாவட்ட பயணிகள் பயன்படும் விதத்தில் புதிய ரயில்கள் இயக்க முடியாத நிலை ஏற்படும். கன்னியாகுமரியிலிருந்து தற்போது இயக்கப்பட்டு வரும் நெடுந்தூர வாராந்திர ரயில்கள் திருக்குறள், ஹவுரா போன்ற ரயில்கள் தினசரி ரயில்களாக மாற்றம் செய்து இயக்க முயற்சிகள் மேற்கொள்ளும் போது பிட்லைன் இடநெருக்கடி ஏற்படும் என்பதால் இயக்க முடியாத நிலை ஏற்படும்.

இந்த ரயிலை அறிவித்து இயக்குவதற்கு முன்பு வடகிழக்கு எல்லை ரயில்வே மண்டலம் சார்பாக திருவனந்தபுரம் கோட்டத்தில் நாங்கள் கேரளா வழியாக உள்ள தடத்தில் ஒர் சிறப்பு ரயிலை அறிவித்து இயக்க இருக்கின்றோம். இதற்கு நீங்கள் அனுமதி வழங்கி எங்கள் ரயில் பெட்டிகளை இரண்டாம் கட்ட பராமரிப்பு செய்து திருப்பி அனுப்ப வேண்டும் என்று அனுமதி கேட்பார்கள். இவ்வாறு அலுவல் கடிதம் வந்த உடனே திருவனந்தபுரம் கோட்டம் கன்னியாகுமரியிலிருந்து இயக்குவதாக இருந்தால் திருநெல்வேலி, மதுரை வழியாக இயக்குங்கள், கேரளா பயணிகளுக்காக இயக்குவதாக இருந்தால் கொச்சுவேலியிருந்து இயக்குங்கள் என்று அல்லவா அனுமதி கடிதத்தில் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் திருவனந்தபுரம் கோட்டம் இவ்வாறு ஒருபோதும் செய்யவே மாட்டார்கள். ஏனென்றால் அவர்களுக்கு எப்போதும் நாகர்கோவில் ரயில் நிலையம் அவர்களின் ரயில்களை பராமரித்து கழுவி விடும் கழிவறையாகவே செயல்பட்டு வருகிறது.

தெற்கு ரயில்வேயில் பொது மேலாளர், ரயில்கள் இயக்க அதிகாரி , முதன்மை வணிக அதிகாரி பயணிகள் பிரிவு, என கேரளாவை சார்ந்த அதிகாரிகள் மட்டுமே முழுக்க முழுக்க பணிபுரிந்து வருகின்றார்கள். இவர்கள்தான் கேரளாவுக்கு சாதகமாக பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இந்த நியூ ஜல்பைகுரி – கன்னியாகுமரி சிறப்பு ரயில் அறிவிப்பு, கன்னியாகுமரி – திப்ருகார் தினசரி ரயிலாக இயங்கும் என்ற அறிவிப்புகள் எல்லாமே இவர்களின் முயற்சி தான்.

கன்னியாகுமரி – திப்ருகர் ரயில்

கன்னியாகுமரி – திப்ருகர் ரயில், நாகர்கோவில் – ஷாலிமார் ரயில் இரண்டுமே கேரளா பயணிகள் வசதிக்காக நாகர்கோவில் ரயில் நிலையத்தில் பராமரிப்பு செய்து இயக்கப்பட்டு வரும் ரயில்களே. இந்த ரயிலை திருநெல்வேலி, மதுரை, திருச்சி, சென்னை வழியாக இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு இயக்க முடியாமல் போனால் இந்த ரயிலை கொச்சுவேலியுடன் நிறுத்தி விடலாம் என்று கோரிக்கையும் வைக்கப்பட்டு உள்ளது. இந்த கோரிக்கைக்கு செவி சாய்க்காமல் திருவனந்தபுரம் கோட்டம் கள்ள மவுனம் சாதித்து வருகிறது.

கேரளாவுக்கு அதிக ரயில்கள்

கேரளாவிலிருந்து விசாகபட்டிணம் வழியாக மேற்கு வங்கம் உட்பட வடகிழக்கு மாநிலங்களுக்கு தற்போது அதிக அளவில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. . இது போதாது என்று மீண்டும் புதிய ரயில்கள் அறிவிக்கப்பட்டு இயக்கப்பட்டு வருகின்றன.

  1. எர்ணாகுளம் – டாடாநகர் (தினசரியாக அறிவிக்கப்பட்டுள்ளது)
  2. ஆலப்புளா – தான்பத் தினசரி
  3. எர்ணாகுளம் – பாட்ணா வாரம் இருமுறை
  4. நாகர்கோவில் – ஷாலிமார் வாராந்திர ரயில் வழி கேரளா
  5. திருவனந்தபுரம் – ஷாலிமார் வாரம் இருமுறை
  6. திருவனந்தபுரம் – சில்சார் வாராந்திர ரயில்
  7. எர்ணாகுளம் – ஹவுரா அந்தோதையா வாராந்திர ரயில்
  8. எர்ணாகுளம் – ஹாட்டியார் வாராந்திர ரயில்
  9. கன்னியாகுமரி – திப்ருகர் வாராந்திர ரயில் (தினசரியாக அறிவிக்கப்பட்டுள்ளது)
  10. மங்களுர் – சந்த்ராகாச்சி வாராந்திர ரயில்

புதிய ரயில்கள்:

கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து பல்வேறு இடங்களுக்கு புதிய ரயில்கள் இயக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன. ரயில்வேத்துறை இந்த கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காமல் புறக்கணித்து வருகின்றது. இவ்வாறு புதிய ரயில்கள் இயக்காமல் இருந்தாலும் பரவாயில்லை. கேரளா பயணிகளுக்கு பயன்படும் வகையில் சுற்றி ரயில்களை நாகர்கோவில், மற்றும் கன்னியாகுமரியிலிருந்து இயக்காமல் இருந்தால் போதும். இதுவே தென்மாவட்டங்களுக்கு செய்யும் நன்மை ஆகும்.

கன்னியாகுமரியிலிருந்து கேரளா வழியாக நியூ ஜல்பைகுரி க்கு பரீட்சாத்த முறையில் சிறப்பு ரயிலை இயக்குகின்றோம் என்ற பெயரில் இயக்குகிறார்கள். இதற்கு தமிழ்நாட்டில் இருந்து எந்த ஒரு எதிர்ப்பும் இல்லை என்றால் இந்த ரயில் நிரந்தர ரயிலாக மாற்றம் செய்து இயக்குவார்கள். கன்னியாகுமரி எம்.பி உட்பட தமிழகத்திலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பினால் இந்த ரயில் சிறப்பு ரயிலோடு நின்றுவிடும். ஆகவே இந்த ரயிலை இயக்குவதாக இருந்தால் திருநெல்வேலி, மதுரை வழியாக இயக்க வேண்டும். இவ்வாறு வழித்தடத்தை மாற்றம் செய்து இயக்க முடியாமல் போனால் இந்த ரயிலை கொச்சுவேலியுடன் நிறுத்தம் செய்து அங்கு பராமரிப்பு செய்து அங்கிருந்து இயக்கி கொள்ளலாம்.

ஒரு வேளை கொச்சுவேலி ரயில் நிலையம் பிட்லைன் பராமரிப்பு இடநெருக்கடியில் இருந்தால் அதற்கும் திருவனந்தபுரம் கோட்டத்துக்கு ஆலோசனை வைக்கப்படுகின்றது. இதன்படி தற்போது கொச்சுவேலியில் பராமரிக்கப்படும் ரயில்களில் மங்களுர், கோவா, மும்பை வழியாக செல்லும் ஒரு சில ரயில்கள் நாகர்கோவில் வழியாக திருநெல்வேலிக்கு நீட்டிப்பு செய்து விட்டால் கொச்சுவேலியில் நிலவும் இடநெருக்கடி வெகுவாக குறையும். இவ்வாறு குறைந்து விட்டால் இந்த நியூ ஜல்பைகுரி மற்றும் திப்ருகர் ரயிலை கொச்சுவேலியில் வைத்து எளிதாக பராமரிக்க முடியும். ஆனால் தென்மாவட்ட பயணிகள் பயன்படும் படியாக இந்த கொங்கன் பாதையில் செல்லும் ரயில்களை திருநெல்வேலி அல்லது தூத்துக்குடிக்கு நீட்டிப்பு செய்ய திருவனந்தபுரம் கோட்டம் தயாராக இல்லை. இந்த ரயில்களை நீட்டிப்பு செய்தால் தமிழர்கள் இங்கிருந்து ரயிலில் அதிக அளவில் ஏறி பயணம் செய்வார்கள் இவ்வாறு செய்தால் அவர்களுக்கு இறக்கைகள் கிடைக்காது அல்லவா இந்த காரணத்தால் தமிழ்நாடு பயணிகளுக்கு பயனுள்ள ரயில்களை இயக்க திருவனந்தபுரம் கோட்டம் தயாராக இல்லை.

கோட்டத்தை மாற்றம் செய்தல்:

இது போன்ற ரயில்கள் இயக்குவதை நிரந்தரமாக தடை செய்ய வேண்டுமானால் முதலில் நாகர்கோவில் துணை கோட்டத்தின் கீழ் உள்ள கன்னியாகுமரியிலிருந்து பாலராமபுரம் வரையிலும் மற்றும் நாகர்கோவில் – திருநெல்வேலி வரை உள்ள இருப்புபாதைகள் மதுரை கோட்டத்துடன் இணைக்க வேண்டும். இவ்வாறு இணைக்கும் போது தற்போது மதுரை கோட்டத்தின் கீழ் உள்ள கொல்லம் – செங்கோட்டை பகுதிகளை திருவனந்தபுரம் கோட்டத்தில் இணைத்து விடலாம். கடந்த 2017-18-ம் ஆண்டு ரயில்வே வாரியம் இவ்வாறு இரண்டு கோட்ட பகுதிகளை மாற்றம் செய்து விடலாம் என்று திட்டம் தீட்டியது. இந்த திட்டத்துக்கு போதிய அரசியல் அழுத்தம் அதாவது தமிழக எம்.பிகள், தமிழக அரசிடமிருந்து வலுவான கோரிக்கை கிடைக்காத காரணத்தால் இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. கிடப்பில் உள்ள ரயில்வே வாரியத்தின் இந்த திட்டத்தை உடனடியாக தூசி தட்டி மீண்டும் எடுத்து உடனடியாக அமல்படுத்த ரயில்வே வாரியத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். இவ்வாறு செய்தால் மட்டுமே இதற்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *