“கந்து வட்டியால் காவலர் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்றால், சாமானியர்களின் நிலை என்ன?” என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
கடலூர் – புவனகிரி அருகே கந்து வட்டி கொடுமையால் ஆயுதப்படை காவலர் செல்வக்குமார் தற்கொலை செய்துகொண்டார். இந்நிலையில், கந்து வட்டி தொடர்பான அனைத்து வழக்குகளையும் உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். இதற்காக, ‘ஆபரேஷன் கந்து வட்டி’ என்ற சிறப்புத் திட்டமும் செயல்படுத்தப்படவுள்ளது.
இந்த நிலையில், காவலர் தற்கொலை குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “கடலூர், புவனகிரி அருகே கந்து வட்டி கொடுமையால் ஆயுதப்படை காவலர் செல்வக்குமார் தற்கொலை செய்துகொண்ட செய்தி மிகுந்த மனவேதனை அளிக்கிறது. கள்ள லாட்டரி,ஆன்லைன் ரம்மி, கந்து வட்டி கொடுமை என எதுவெல்லாம் தமிழக மக்களின் நலனுக்கு ஒவ்வாதென ஜெயலலிதாவும், அவரின் அரசும் தடை செய்ததோ அவையெல்லாம் தற்போது தமிழகத்தில் சுதந்திரமாக செயல்படுகின்றன.
கந்து வட்டி கொடுமையால் காவலர் ஒருவரே தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டார் என்றால் சாமானியர்களின் நிலை என்ன ஆகும்? கந்து வட்டி மீண்டும் தலைதூக்காமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க இந்த அரசை வலியுறுத்துகிறேன்” என்று அந்தப் பதிவில் கூறியுள்ளார்.