• Thu. Dec 12th, 2024

முதல்வர் உத்தரவிட்டால் போதை பொருட்கள் பயன்பாட்டை தடுக்க முடியும்- ஆர்.பி.உதயகுமார்

Byதரணி

Aug 11, 2022

தமிழக முதல்வர் உத்தரவிட்டால் தமிழகம் முழுவதும் ஒரே நாளில் வேட்டையாடி போதை பொருட்கள் பயன்பாட்டை தடுக்க முடியும் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி.

மதுரை அருகே திருவேடகம் வைகையாற்றில் மூழ்கி உயிரிழந்த இளைஞர்களின் குடும்பத்திற்கு முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் ஆறுதல் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் 90 லட்சம் இளைஞர்கள் வேலை வாய்ப்பிற்காக வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துவைத்து காத்துக்கொண்டுள்ளனர். வேலை வாய்ப்பு கிடைக்காத மன அழுத்தத்திலும் தீய நட்பினாலும் இளைஞர்கள் போதை பொருட்களுக்கு அடிமையாகி வருகின்றனர். திமுக ஆட்சிக்கு வந்த 5 மாதத்தில் போதை பொருட்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. போதை பொருட்கள் நடமாட்டத்தை இரும்பு கரம் கொண்டு தடுக்க வேண்டும்.

சர்வாதிகாரியாக செயல்படுவேன் என முதல்வர் சொன்னது வார்த்தையில் மட்டும் அழகாக உள்ளது செயல்பாட்டில் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை. ஆளுமை உள்ள காவல்துறையை வைத்து கொண்டு செயல் இழந்த காவல்துறையாக தமிழக காவல்துறை காட்சியளிப்பது வேதனையளிக்கிறது.

தமிழக முதல்வர் உத்தரவிட்டால் தமிழகம் முழுவதும் ஒரே நாளில் வேட்டையாடி போதை பொருட்கள் பயன்பாட்டை தடுக்க முடியும், அதை விடுத்து மேம்போக்காக விழிப்புணர்வு ஏற்படுத்துவது ஏற்புடையதாக இல்லை. விழிப்புணர்வு என்பது வேறு நடவடிக்கை என்பது வேறு. போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ள வேண்டும் என முதல்வர் கடிதம் எழுதியுள்ளது கேலிக்கூத்தாக உள்ளது.போதை பொருட்கள் பயன்பாட்டை தடுக்க காவல்துறைக்கு உத்தரவிடுவதை விட்டுவிட்டு சட்டமன்ற உறுப்பினர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்க சொல்வது கேலிக்கூத்தாக உள்ளது.

பள்ளிகளுக்கு, கல்லூரிகளுக்கு அருகில் போதை பொருட்கள் விற்பனையை தடுக்காமல் எத்தனை விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் அது எந்த பயனையும் தராது. போதை பொருள் விற்பனையில் ஈடுபட்டவர்கள் எத்தனை பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் எத்தனை பேருடைய சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது என்ற வெள்ளை அறிக்கையை முதல்வர் வெளியிடுவாரா?என கேள்வி எழுப்பியுள்ளார். போதை பொருட்கள் நடமாட்டத்தை போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவர் போதை பொருளுக்கு அடிமையாகி வருவது ஆய்வில் தெரியவந்துள்ளது. போதை பொருட்கள் பயன்பாட்டால் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. படிப்படியாக டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையை குறைக்க அரசு முன்வர வேண்டும். தடுமாட்டமான திமுக ஆட்சியில் யூரியா, மின்சாரம்,பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்துக்குமே தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்றார்.