• Fri. Apr 26th, 2024

கோவையை கண்டு அலறும் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் …என்ன நடக்கிறது ?

கோவை மாநகராட்சி தேர்தலில், அரசியல் ரீதியான மோதலும், அதன் தொடர்ச்சியாக பதற்றமும் அதிகரித்து வரும் நிலையில், கடந்த 15 நாட்களில் நான்கு தேர்தல் பார்வையாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.கோவை மாவட்டத்தில் ஆளும்கட்சிக்கு ஒரு எம்.எல்.ஏ., கூட இல்லாததால், மாநகராட்சி நிர்வாகத்தை எப்படியாவது கைப்பற்ற வேண்டுமென, தி.மு.க., தலைமை தீவிரமாக முயற்சி செய்து வருகிறது.

சட்டசபை தேர்தலில் பெற்ற வெற்றியைத் தக்க வைப்பதற்காக, அ.தி.மு.க.,வும் கடுமையாக களப்பணியில் இறங்கிஉள்ளது. தனித்துப் போட்டியிடும் பா.ஜ., குறைந்தபட்சம் ஐந்தாறு வார்டுகளையாவது கைப்பற்ற வேண்டுமென, திராவிட கட்சிகள் பாணியில் தேர்தல் வேலைகளை செய்து கொண்டிருக்கிறது.ஒரு புறம் ஆளும்கட்சி, மற்றொரு புறத்தில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் என, இரண்டு தரப்பினருக்கும் இடையில் அதிகாரிகள் சிக்கி, விழிபிதுங்கி நிற்கின்றனர். யாருக்கு சாதகமாக நடந்தாலும் பிரச்னை என்பதால், செய்வதறியாது தவிக்கின்றனர். இங்கு தேர்தல் பார்வையாளராக பணிக்கு வருவதற்கே, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அச்சப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதை உறுதிப்படுத்தும் வகையில், 15 நாட்களுக்குள் நான்கு தேர்தல் பார்வையாளர்கள் கோவையில் மாற்றப்பட்டுள்ளனர்.பிப்., 1ம் தேதி, 38 மாவட்டங்களுக்கு தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்ட போது, கோவைக்கு மரியம் பல்லவி பல்தேவ் என்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி நியமிக்கப்பட்டார். அவர் உடல்நிலை சரியில்லாததால், இங்கு பணிக்கு வரவில்லை என, காரணம் கூறப்பட்டது. அவருக்குப் பதிலாக, ஹர்சகாய் மீனா தேர்தல் பார்வையாளராக மாற்றப்பட்டார். அவர் கோவையில் ஒரு வாரமாக ஓட்டுச்சாவடி மையங்களையும், ஓட்டு எண்ணும் மையங்களையும் பார்வையிட்டு, நன்றாகவே பணியாற்றி வந்தார்.என்ன காரணமென்றே தெரியாமல், சனிக்கிழமை அவர் மாற்றப்பட்டு, பவன் குமார் பன்சால் நியமிக்கப்பட்டார்.

அப்படி ஒருவர் நியமிக்கப்பட்டதே, கோவையிலுள்ள பெரும்பாலான அதிகாரிகளுக்கு தெரியவே இல்லை. திங்கட்கிழமை மதுக்கரை நகராட்சி அலுவலகத்தில், தபால் ஓட்டுப் பெட்டிகளை ஆய்வு செய்தது உள்ளிட்ட சில நிகழ்ச்சிகளில் பங்கேற்ற போது தான், புதிய தேர்தல் பார்வையாளர் நியமிக்கப்பட்ட விஷயமே, பல அதிகாரிகளுக்கு தெரியவந்தது.இந்நிலையில், அவரையும் மாற்றிவிட்டு, ஐ.ஏ.எஸ்., அதிகாரி கோவிந்தராவை, கோவைக்கான தேர்தல் பார்வையாளராக மாநில தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. அவர், நேற்று கோவை வந்து தன் பணிகளை துவக்கியுள்ளார். தேர்தலுக்கு இன்னும் மூன்று நாட்களே இருக்கும் நிலையில், கோவையில் அரசியல் கட்சியினரிடையே மோதலும், பதற்றமும் அதிகரித்து வருகிறது. அதனால் இவரும் தேர்தல் முடியும் வரை தாக்குப்பிடிப்பாரா என்பது தான் இப்போதைய கேள்வியாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *