• Thu. Sep 19th, 2024

தனிக்கட்சி தொடங்க மாட்டேன் – ஓ.பன்னீர்செல்வம்

ByA.Tamilselvan

Feb 24, 2023

நான் எந்த காரணத்தை கொண்டும் தனிக்கட்சி தொடங்க மாட்டேன். முடிவு கிடைக்கும் வரை போராடுவேன்- ஓபிஎஸ் பேட்டி
ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் பேசும் போது:- எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா கடைபிடித்த சட்ட விதியைத்தான் இன்று காப்பாற்ற நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம். ஜெயலலிதாதான் நிரந்தர பொதுச்செயலாளர் என்று நாங்கள் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறோம். அந்த தீர்மானத்தை ரத்து செய்வதற்கு யாருக்கும் அதிகாரம் கிடையாது. இந்த இயக்கம் தொண்டர்களுக்கான இயக்கமாக எம்.ஜி.ஆர். உருவாக்கினார். இன்று வரை தொண்டர்களை காப்பாற்றும் இயக்கமாகவே இந்த இயக்கம் இருக்கிறது. இது ஓ.பி.எஸ். தாத்தாவோ, எடப்பாடி பழனிசாமியின் தாத்தாவோ ஆரம்பித்த கட்சி அல்ல. தொண்டர்களுக்காக எம்.ஜி.ஆர். ஆரம்பித்த கட்சி. அதற்காகத்தான் நாங்கள் இன்று தர்மயுத்தத்தை நடத்திக் கொண்டு இருக்கிறோம். அதற்கு விடிவு வரும் வரை, நல்ல தீர்ப்பு வரும் வரை நாங்கள் போராடுவோம். இதற்காக மக்கள் மன்றத்தை நாடி செல்வதற்கு எங்களது படை தயாராகி விட்டது. மக்களிடம் உறுதியாக நல்ல தீர்ப்பு கிடைக்கும். இந்த தீர்ப்பால் எங்களுக்கு எந்த பின்னடைவும் இல்லை.
இந்த தீர்ப்பு வந்ததற்கு பின்னர்தான் எங்களுடைய தொண்டர்கள் மிகப்பெரிய எழுச்சியுடன் இருக்கிறார்கள். எந்த தேர்தல் வந்தாலும் எம்.ஜி.ஆர். வகுத்த சட்ட விதிகளை காப்பாற்றுபவர்கள் பக்கம்தான் ஒன்றரை கோடி தொண்டர்களும் இருக்கிறார்கள். தி.மு.க.வின் பி டீம் என்று யாராவது சொன்னால் அதுபற்றி எங்களிடம் கேள்வி கேட்பதா? எடப்பாடி பழனிசாமி அணிதான் தி.மு.க.வின் பி டீம். அதுமட்டுமல்ல ஏ டூ இசட் டீமும் அவர்கள்தான். எங்களை பார்த்து ஏதாவது குறை சொல்ல முடியுமா? ஆனால் அவர்களை பற்றி குறை சொல்ல ஆயிரம் இருக்கிறது. அவை ஒவ்வொன்றாக வெளிவரும். கட்சி உடையக்கூடாது என்று இதுவரை நாங்கள் பொறுமை காத்திருந்தோம். இன்று சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், தினகரனை சேர்க்க மாட்டோம் என்று சொல்கிறார்கள். அது அவரது தாத்தா ஆரம்பித்த கட்சியா? ஆணவத்தின் உச்சத்தில் சென்று கொண்டிருக்கிறார். அந்த ஆணவத்தை அடக்குகின்ற சக்தி அ.தி.மு.க. தொண்டர்களிடம் இருக்கிறது. நான் எந்த காரணத்தை கொண்டும் தனிக்கட்சி தொடங்க மாட்டேன். முடிவு கிடைக்கும் வரை போராடுவேன். நாங்கள் தர்மத்தின் வழிநின்று நீதி கேட்போம். தீர்ப்பை எங்கு பெற வேண்டுமோ அங்கு சென்று பெறுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *