சசிகலா சிறைக்குச் சென்றதையடுத்து ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க இயங்கி வந்தது. பின்னர் கட்சியிலிருந்து சசிகலா நீக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், தற்போது நடந்து முடிந்த தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க எந்தவொரு மாநகராட்சியையும் கைப்பற்றாமல் தோல்வியடைந்ததையடுத்து. நகராட்சி மற்றும் பேரூராட்சிகளிலும் பலத்த அடி விழுந்தது. இதன் காரணமாக தற்போது அ.தி.மு.க-வில் சசிகலா குறித்த பேச்சுக்கள் மீண்டும் தொடங்கியுள்ளது. ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, எடப்பாடி பழனிச்சாமி
அண்மையில் கூட அ.தி.மு.க தேனி மாவட்டச் செயலாளர், சசிகலாவையும் தினகரனையும் கட்சியில் சேர்த்தாலே அணைத்து பிரச்னைகளும் முடிந்துவிடும் என்று பேசியிருந்தார். இதற்கு அ.தி.மு.க-வில் இருவேறுபட்ட கருத்துக்களும் நிலவி வருகின்றன. இந்த நிலையில்,சசிகலா தென்மாவட்டங்களுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காகச் சென்னை விமான நிலையம் சென்ற சசிகலா-விடத்தில், “சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது தொண்டர்கள் உங்களைச் சந்திப்பார்களா” என செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினார். அப்போது பேசிய சசிகலா, “அ.தி.மு.க ஒரே குடும்பம், நிச்சயமாகத் தொண்டர்களைச் சந்திப்பேன்” என கூறினார்.