சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் ரஜினிகாந்த், சிகிச்சை முடிந்து வீடு திரும்பியபின்பு நலமுடன் இருப்பதாக ஆடியோ வெளியிட்டுள்ளார்.
சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த், கடந்த 28-ஆம் தேதி உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தலை சுற்றல் இருந்த காரணத்தினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக முதலில் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து ரத்த நாளத்தில் ஏற்பட்ட அடைப்பு அவருக்கு நீக்கப்பட்டது. ரஜினிகாந்த் 3 நாட்கள் சிகிச்சைக்குப் பெற்ற நிலையில் நேற்று இரவு வீடு திரும்பினார். அவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியபின்பு, சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதாகவும் தாம் நலமுடன் இருப்பதாகவும் நடிகர் ரஜினிகாந்த் ஆடியோ பதிவு வெளியிட்டுள்ளார். தனது ஆரோக்கியத்திற்காக பிரார்த்தனை செய்த ரசிகர்களுக்கு நன்றி, தனது நலன் பற்றி விசாரித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி என அவர் அந்த ஆடியோ பதிவில் தெரிவித்திருக்கிறார்.
முன்னதாக ரஜினி வாழ்நாள் சாதனைக்கான “தாதா சாகேப் பால்கே” விருது பெற்றது, தீபாவளி விருந்தாக திரைக்கு வரும் ‘அண்ணாத்த’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் ரஜினிகாந்துக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது ரசிகர்களிடம் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியது.