• Thu. Feb 13th, 2025

படம் பார்க்க போலீசாருக்கு விடுமுறை.. அரசு அதிரடி அறிவிப்பு..!

பாலிவுட் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி இயக்கிய ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ என்ற ஹிந்தி திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியானது.

இந்தப் படத்தில் அனுபம் கெர், தர்ஷன் குமார், மிதுன் சக்ரவர்த்தி மற்றும் பல்லவி ஜோஷி உட்பட பலர் நடித்துள்ளனர். பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள், 1990-ல் காஷ்மீர் பண்டிட்டுகளை திட்டமிட்டு கொன்றது மற்றும் வெளியேற்றியதை இப்படம் சித்தரிக்கிறது.

இந்நிலையில், ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்தை போலீசார் தங்கள் குடும்பத்துடன் சென்று பார்க்க போலீசாருக்கு விடுமுறை அளிக்கப்பட உள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து அம்மாநில உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா கூறுகையில், “தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தை பார்க்க மத்திய பிரதேச போலீசாருக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. இதற்கான அறிவுறுத்தல் காவல்துறை தலைமை இயக்குநர் சுதிர் சக்சேனாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மாநிலத்தில் உள்ள எந்த ஒரு போலீஸ்காரரும் தங்கள் குடும்பத்துடன் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ பார்க்கச் செல்ல விரும்பும் போதெல்லாம் விடுமுறை அளிக்குமாறு நான் டிஜிபியிடம் கூறியுள்ளேன்” என்று கூறினார்.

மத்தியப் பிரதேச மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் இந்தப் படத்துக்கு பாராட்டு தெரிவித்திருந்தார். மேலும், இத்திரைப்படத்திற்கு கேளிக்கை வரி விலக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.