• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

கேரளாவில் டூவீலரில் செல்லும் குழந்தைகளுக்கும் ஹெல்மெட் கட்டாயம்

Byவிஷா

Oct 9, 2024

கேரளாவில் டூவீலரில் செல்லும் 4 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கும் ஹெல்மெட் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் கடந்த சில வாரங்களுக்கு முன் ஏற்பட்ட ஒரு சாலை விபத்தில் காரின் முன் இருக்கையில் தாயின் மடியில் அமர்ந்திருந்த 2 வயது குழந்தை ஏர்பேக் அமுக்கி மூச்சுத் திணறி பரிதாபமாக உயிரிழந்தது. இந்த சம்பவத்தை தொடர்ந்து கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் பயணம் செய்யும் குழந்தைகளுக்கு பாதுகாப்பை அதிகரிக்க கேரள மோட்டார் வாகனத்துறை தீர்மானித்துள்ளது.
இதுதொடர்பாக கேரள போக்குவரத்துத் துறை ஆணையாளர் எச். நாகராஜு வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது..,
கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் பயணம் செய்யும் குழந்தைகளுக்கு பாதுகாப்பை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. கார்களில் பின் இருக்கையில் குழந்தைகளுக்கு அவர்களது வயதுக்கு ஏற்ப தனி இருக்கையும், சீட் பெல்ட்டும் கட்டாயமாகும். 4 முதல் 14 வயது வரை உள்ள 135 செமீக்கு குறைவான உயரமுள்ள குழந்தைகளுக்கு கார்களில் பின் இருக்கையில் குஷன் உள்ள இருக்கையும், சீட் பெல்ட்டும் இருக்க வேண்டும்.
இருசக்கர வாகனத்தில் 4 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு ஹெல்மெட் கட்டாயமாகும். பெற்றோருடன் பைக்கில் செல்லும்போது குழந்தைகள் தூங்குவதற்கு வாய்ப்பு உண்டு. எனவே குழந்தையுடன் சேர்த்து ஒரு பெல்ட் போட்டுக் கொள்வது நல்லதாகும். கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் செல்லும் போது குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்கு வாகன ஓட்டுநர் தான் முழு பொறுப்பாகும். இதை மீறுபவர்களுக்கு டிசம்பர் மாதம் முதல் அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.