• Thu. Apr 25th, 2024

ஏர் ஆம்புலன்ஸ் ஆக மாறிய ஜெயலலிதா பயன்படுத்திய ஹெலிகாப்டர்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அரசு விழாக்களுக்கு செல்ல பயன்படுத்தி வந்த ஹெலிகாப்டர் ஏர் ஆம்புலன்ஸ் ஆக மாற்றப்பட்டுள்ள நிலையில் அதனை பராமரிக்க டெண்டர் விட்டிருக்கிறது தமிழக அரசு.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா 2016-ஆம் ஆண்டு பிரசாரம், அரசு விழாக்களில் பங்கேற்கும் பயணங்களுக்காக பெல் 412 EP ஹெலிகாப்டரை வாங்கினார் இதில் 11 பேர் பயணம் செய்யலாம்.
ஆனால் ஹெலிகாப்டர் வாங்கப்பட்டது முதல் மிகக் குறைந்த நாட்கள்தான் இந்த ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டது. நீண்ட காலமாக இதனை பயன்படுத்தவில்லை. கடந்த 2018-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கடைசியாக பயன்படுத்தப்பட்டது இந்த ஹெலிகாப்டர். கடந்த 2019-ம் ஆண்டு ஹெலிகாப்டரை ஏலத்திற்கு விட முடிவெடுத்தது தமிழக அரசு. அதற்கான பொறுப்பு மாநில வாணிப கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

ஹெலிகாப்படர் ஏலத்திற்கான அடிப்படை விலை ரூ.35 கோடி என நிர்ணயம் செய்யப்பட்டு டெண்டர் கோரப்பட்டது. ஆனால் அப்போது ஹெலிகாப்டரை யாரும் ஏலத்தில் எடுக்க முன்வரவில்லை. லோக்சபா தேர்தல் காலத்திலாவது ஹெலிகாப்டர் ஏலத்துக்கு போகும் என எதிர்பார்க்கப்பட்டது. அப்போதும் ஏலம் போகவில்லை. இதனால் சென்னை விமான நிலையத்திலேயே இந்த ஹெலிகாப்டர் நிறுத்தப்பட்டிருந்தது.


பின்னர் இந்த ஹெலிகாப்டரை ஏர் ஆம்புலன்ஸாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது இந்த ஹெலிகாப்டரை பராமரிக்க டெண்டர் கோரியுள்ளது தமிழக அரசு. டெண்டர் விண்ணப்பங்களை வழங்க ஜனவரி 6-ந் தேதி கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *