• Mon. Sep 9th, 2024

இன்று 12 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை

சென்னையை மிரட்டிய மாண்டஸ் புயல் பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தாமல் மாமல்லபுரத்தில் கரையைக் கடந்தது. இதில் 5 பேர் பலியானதோடு 400 மரங்கள் அடியோடு சாய்ந்தன. 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வங்கக்கடலில் கடந்த 5-ந்தேதி உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாகவும், தீவிர காற்றழுத்த தாழ்வுமண்டலமாகவும், அதனைத்தொடர்ந்து புயலாகவும் வலுப்பெற்றது. இந்த புயலுக்கு மாண்டஸ் என்று பெயரிடப்பட்டு இருந்தது. இந்த புயல் சென்னைக்கும், புதுச்சேரிக்கும் இடையே மாமல்லபுரம் அருகில் நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு மேல் கரையை கடக்க தொடங்கியது. அந்த நேரத்தில் தமிழகத்தில் சென்னை உள்பட வட கடலோர மாவட்டங்களில் காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. அப்போது மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது.
அப்போது சென்னை உள்பட வட கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை கொட்டியது. சுமார் 3 மணி நேரம் மாண்டஸ் புயலின் மையப்பகுதி கடந்தது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. மையப்பகுதியை தொடர்ந்து, புயலின் வால்பகுதி கடந்தது. புயல் கரையை கடந்தபோது, சென்னை மற்றும் மாமல்லபுரம் கடற்கரை பகுதிகள், புதுச்சேரி கடற்கரை பகுதிகளில் கடல் மிகவும் ஆக்ரோஷத்துடன் இருந்தது. இதனால் கடற்கரை பகுதிகளில் கரையை தாண்டி கடல் அலை மேல் நோக்கி பாய்ந்தது. கடற்கரை பகுதிகளையொட்டிய மீனவ கிராமங்களின் குடியிருப்புகளுக்கும் கடல் நீர் புகுந்தது. இதனால் சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் வீடுகளின் மேற்கூரைகள் பறந்தன. படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி சேதம் அடைந்தன. சென்னை, மாமல்லபுரம், புதுச்சேரி கடற்கரை பகுதிகளில் மண் அரிப்பு ஏற்பட்டன. மேலும் பல இடங்களில் மரங்கள், மின்கம்பங்கள், விளம்பர பேனர்கள் சரிந்து கீழே சாய்ந்தன. அரசின் முன்எச்சரிக்கை நடவடிக்கையால், விழுந்து கிடந்த மரங்கள், மின் கம்பங்கள் உள்பட அனைத்தையும் உடனுக்குடன் அகற்றினர்.
கரையை கடந்த புயல் அதன்பின்னர் வலுவிழக்க தொடங்கியது. முதலில் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நேற்று காலை 8.30 மணி நிலவரப்படி வடகடலோர பகுதிகளில் மையம் கொண்டிருந்தது. இதனால் நேற்று மதியம் வரை சென்னை, புதுச்சேரியை சுற்றியுள்ள கடலோர பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் வீசியபடியே இருந்தது. அதனைத்தொடர்ந்து வட கடலோர மாவட்டங்களுக்கு அருகில் நிலைகொண்டிருந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று இரவு காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுவிழந்து, மேற்கே தென்மேற்கே அரபிக்கடல் நோக்கி நகர்ந்து சென்றது.
புயல் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் நேற்று முன்தினம் முதல் நேற்று அதிகாலை வரை மழை பெய்தது. அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கத்தில் 25 செ.மீ. மழை பதிவாகி இருந்தது. புயல் கரையை கடந்த மாமல்லபுரத்தில் 13 செ.மீ. மழை பெய்தது. இது தவிர தமிழகத்தில் 26 இடங்களில் மிக கனமழையும், 35 இடங்களில் கனமழையும் பெய்து இருக்கிறது.
புயல் கரையை கடந்து தாழ்வு மண்டலமாக வலுவிழந்து இருப்பதால், தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *