• Thu. Apr 24th, 2025

தீ விபத்தால் மூடப்பட்ட ஹீத்ரோ விமான நிலையம் இயங்கத் தொடங்கியது!

ByP.Kavitha Kumar

Mar 22, 2025

துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட தீவிபத்தால் மூடப்பட்ட லண்டனில் உள்ள ஹீத்ரோ சர்வதேச விமான நிலையம் தற்போது செயல்படத் துவங்கியுள்ளது.

உலகத்தின் பரபரப்பான விமான நிலையங்களில் லண்டனில் உள்ள ஹீத்ரோ சர்வதேச விமான நிலையமும் ஒன்று. இந்த விமான நிலையத்தில் இருந்து நாள்தோறும் நூற்றுக்கணக்கான விமானங்கள் உலகின் பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் விமான நிலையத்துக்கு மின்சாரம் வழங்கக்கூடிய துணை மின் நிலையத்தில் நேற்றுமுன்தினம் இரவு 11.23 மணிக்கு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. விமான நிலையத்திலிருந்து வடக்கே சுமார் 1.5 மைல் தொலைவில் உள்ள ஹேய்ஸில் உள்ள வடக்கு ஹைட் துணை மின்நிலையத்தில் இந்த தீ விபத்து ஏற்பட்டது.

இந்த தீ விபத்து காரணமாக விமான நிலையத்தில் கடுமையான புகை மூட்டம் காணப்பட்டது. இது குறித்து தகவலறிந்து நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் வாகனங்களில் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதனால் ஹீத்ரோ விமான நிலையம் நேற்று முழுமையாக மூடப்பட்டது. இதன் காரணமாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்ன. இதனால் சுமார் 2 லட்சம் பயணிகளின் பயணம் பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில் ஹீத்ரோ விமான நிலையத்தில் குறைந்த எண்ணிக்கையிலான விமானங்கள் மீண்டும் தரையிறங்கத் தொடங்கியுள்ளன. பிரிட்டிஷ் ஏர்வேஸ், ஏர் கனடா மற்றும் யுனைடெட் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட பல விமான நிறுவனங்கள் ஹீத்ரோவிற்கும் அங்கிருந்தும் திட்டமிடப்பட்ட விமானங்களை மீண்டும் தொடங்குவதாக அறிவித்துள்ளன. இங்கிருந்து இயக்கப்படும் அனைத்து விமானங்களின் அட்டவணையும் இன்று அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

சவுதி அரேபியாவின் ரியாத்திற்குச் செல்லும் பிரிட்டிஷ் கொலம்பியா விமானம், எதிர்பார்த்த புறப்படும் நேரத்திற்கு சற்று தாமதத்திற்குப் பிறகு இரவு 9 மணிக்கு சற்று முன்பு புறப்பட்டது. நெரிசலைக் குறைக்க உதவும் வகையில், இரவு நேர விமானப் பயணங்களுக்கான கட்டுப்பாடுகளும் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக விமான போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.