• Thu. Apr 24th, 2025

போர் விமானங்கள், ட்ரோன்கள் மூலம் தாக்குதல்- அதிபர் மாளிகையை கைப்பற்றியது சூடான் ராணுவம்!

ByP.Kavitha Kumar

Mar 22, 2025

சூடானில் துணை ராணுவப்படை கட்டுப்பாட்டில் இருந்த அதிபர் மாளிகையை ராணுவப்படைகள் மீண்டும் கைப்பற்றியுள்ளன.

வட ஆப்பிரிக்க நாடான சூடானில் ராணுவத்தினருக்கும் ஆர்எஸ்எஃப் எனப்படும் துணை ராணுவப்படையினருக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் நிலவி வருகிறது கடந்த 2023 ஏப்ரல் மாதம் இது உள்நாட்டு போராக வெடித்தது. இந்த மோதலில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக ஐ.நா சபை தெரிவித்துள்ளது. மேலும் 80 லட்சம் பேர் உள்நாட்டிலேயே இடம் பெயர்ந்துள்ள நிலையில் 34 லட்சம் பேர் பிற நாடுகளுக்கு சென்றுள்ளனர்.
இந்த நிலையில் சூடானின் தலைநகரான கார்டூமில் உள்ள அதிபர் மாளிகையை ஆர்எஸ்எஃப் அமைப்பு ஆக்கிரமித்தது. இதனைத் தொடர்ந்து சூடான் நாட்டின் ராணுவப்படைகள் கடந்த பிப்ரவரி மாதம் முதல் தலைநகரின் பல முக்கிய பகுதிகளை துணை ராணுவப் படைகளிடமிருந்து மீட்டு வந்தன. ஆனால், கார்டூமின் மிகப்பெரிய அணையுள்ள ஜபால் அவ்லியா உள்ளிட்ட பகுதிகள் துணை ராணுவப் படையில் கட்டுப்பாட்டில் தான் இருந்து வருகிறது.

இந்த நிலையில் கடந்த நான்கு நாட்களாக அதிபர் மாளிகையைக் கைப்பற இருதரப்புக்கும் இடையே போர் தீவிரமடைந்தது. இந்த சூழலில் சூடான் ராணுவம் போர் விமானங்கள் மற்றும் ட்ரோன்களைக் கொண்டு உயர் கட்டடங்கள் அரசு நிறுவனங்களில் வேரூன்றியிருந்த துணை ராணுவப்படைகளின் மீது தாக்குதல் நடத்தினர்.
இதுகுறித்து சூடானின் ராணுவப்படைகளின் செய்தி தொடர்பாளர் நலிபில் அப்தல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், சூடான் ராணுவப்படைகள் மத்திய கார்டூமின் அல்- சொவுக் அல்- அராபி சந்தை மற்றும் குடியரசு மாளிகை கட்டடங்கள் உள்ளிட்ட பகுதிகளில் எஞ்சியிருந்த துணை ராணுவப்படையினரை அழித்து அவர்களிடமிருந்து மிகப்பெரிய ஆயுதங்களையும், உபகரணங்களையும் பறிமுதல் செய்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

மத்திய சூடானில் ஆர்எஸ்எஃப் துணை ராணுவப்படை கட்டுப்பாட்டில் இருந்த பல பகுதிகளை ராணுவம் மீட்டுள்ளது. ஆனாலும் மேற்கு சூடானில் பெரும் பகுதி மற்றும் தலைநகரின் சில பகுதிகளை துணை ராணுவப்படை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.