டெல்லி ஜஹாங்கிர்புரி வன்முறையை தொடர்ந்து அங்கு ஆக்கிரமிப்பு நிலங்களில் கட்டப்பட்டு இருக்கும் கலவரக்காரர்களின் வீடுகளை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இதற்காக அங்கு 9 புல்டோசர்கள் மூலம் வீடுகள், கடைகளை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இன்றும் நாளையும் அங்கு கட்டிடங்கள் இடிக்கப்பட உள்ளது.
டெல்லியில் அனுமன் ஜெயந்தியின் போது இந்துக்கள் – இஸ்லாமியர்கள் இடையே மோசமான கலவரம் ஏற்பட்டது. அங்கே சிலையை கொண்டு சென்ற போது கலவரம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் இரண்டு விதமான கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன.
அதன்படி மசூதி மீது இந்துக்கள் கற்களை வீசி, காவி கொடி நட முயன்றதாக கூறப்படுகிறது. இன்னொரு பக்கம் இஸ்லாமியர்கள்தான் மசூதியில் இருந்து முதலில் கற்களை வீசினார்கள் என்று கூறப்படுகிறது.இதன் காரணமாக அங்கு இரண்டு பிரிவினருக்கு இடையில் தகராறு ஏற்பட்டது. இந்த தகராறு கலவரத்தில் முடிய, இரண்டு தரப்பினரும் மாறி மாறி கற்களால் தாக்கிக்கொண்டனர்மோதலை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு போலீசார் வந்தனர். பல போலீசார் இந்த தாக்குதலில் காயம் அடைந்தனர். அங்கு இருந்த கடைகள் பல இந்த தாக்குதலில் அடித்து உடைக்கப்பட்டன. இதனால் அந்த பகுதியில் கடந்த 4 நாட்களாக மிகவும் பதற்றமான சூழ்நிலை காணப்பட்டு வருகிறது.
இதுவரை ஜஹாங்கிர்புரி வன்முறை தொடர்பாக 23 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதில் சிறுவர்களும் அடக்கம். கைது செய்யப்பட்ட பெரும்பாலான நபர்கள் இஸ்லாமியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்ட எல்லோரும் ரோகிணி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த நிலையில்தான் டெல்லி ஜஹாங்கிர்புரி வன்முறையை தொடர்ந்து அங்கு ஆக்கிரமிப்பு நிலங்களில் கட்டப்பட்டு இருக்கும் கலவரக்காரர்களின் வீடுகளை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இப்போதெல்லாம் கலவரம் நடக்கும் இடங்களில் கலவரத்தில் ஈடுபட்டவர்களாக கருதப்படும் நபர்களின் வீடுகள், கடைகள் இடிக்கப்படுகின்றன. மத்திய பிரதேசம், உத்தர பிரதேசத்தில் சமீபத்தில் கலவரத்தில் ஈடுபட்டதாக கூறி இஸ்லாமியர்களின் வீடுகள், கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. அவர்கள் ஆக்கிரமிப்பு செய்து கட்டிடம் கட்டி உள்ளதாக அங்கு புல்டோசர் மூலம் கட்டிடங்கள் இடிக்கப்பட்டது. தற்போது வடக்கு டெல்லியிலும் கட்டிடங்களை இடிக்கும் முடிவை எடுத்துள்ளனர்.
கலவரம் செய்து, ஆக்கிரமிப்பு நிலத்தில் வீடும் கட்டி இருப்பவர்களின் கட்டிடங்களை மட்டுமே இடுகிறோம். இதில் பெரும்பாலானவை இஸ்லாமியர்களின் வீடுகள் என்று கூறப்படுகிறது. கலவரம் செய்யாதவர்கள் கவலைப்பட வேண்டாம் என்று வடக்கு டெல்லி மாநகராட்சி தரப்பு விளக்கம் அளித்து உள்ளது. இதற்காக அங்கு 9 புல்டோசர்கள் மூலம் வீடுகள், கடைகளை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. போலீசாரின் உதவியிடன் அங்கு இந்த கட்டிடங்கள் இடிக்கப்பட உள்ளது.
இதற்காக மொத்தம் 400 போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளன. புல்டோசர்கள் அங்கு கட்டிடங்களை இடிக்க தயார் நிலையில் உள்ளது. இங்கு கட்டிடங்கள் இடிக்கப்பட உள்ள பகுதியில் போலீஸ் ஸ்பெஷல் ஆணையர் தீபேந்திர பதாக் ஆய்வு செய்து வருகிறது. முன்னதாக இங்கு ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டிடம் கட்டி இருப்பவர்களின் கட்டிடங்களை அகற்ற வேண்டும் என்று டெல்லி பாஜக தலைவர் குப்தா தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கட்டிடம் இடிக்கும் நிகழ்வு காரணமாக அங்கு பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டு வருகிறது.