• Sat. Apr 20th, 2024

மதுரையில் வீர ஆஞ்சநேயர் திருக்கோவில் அனுமன் ஜெயந்தி விழா

Byp Kumar

Dec 23, 2022

மதுரை மாவட்டம் அனுப்பானடியில் அமைந்துள்ள வீர ஆஞ்சநேயர் திருக்கோவில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு ஹோமம் மற்றும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டன இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்
மதுரை மாநகரில் கிழக்கு புறம் அமைந்துள்ளதும் சிவபெருமானின் திருவிளையாடல்களில் நரியை பரியாக்கிய லீலைக்காக ஆண்டுதோறும் நரிகள் அனுப்பப்படும் சிறப்பு கொண்ட இந்த அனுப்பானடியில் வீற்றிருந்து அருள் பாலித்து வரும் வீர ஆஞ்சநேயருக்கு அனுமன் ஜெயந்தி விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு காலையில் புண்ணியாஜனம் மகா சங்கல்பம் ஆகியவுடன் துவங்கிய சிறப்பு பூஜையில் உலக ஜீவராசிகள் அனைத்திற்கும் நலமும் வளமும் பெற்று இன்புற்று வாழ்ந்திட ஆஞ்சநேயரின் அருளை வேண்டி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன
தொடர்ந்து லட்சுமி நாராயண ஹோமம் உள்ளிட்ட பல்வேறு ஹோமங்கள் நடத்தப்பட்டு பூர்ணாஹதி நடைபெற்றது.


இதனை தொடர்ந்து மூலவர் ஆஞ்சநேயருக்கு பால் , மஞ்சள் . அரிசி பொடி , தயிர் , தேன் , இளநீர் , பன்னீர் , சந்தனம் உள்ளிட்ட அபிஷேக பொருட்கள் கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டது . சிறப்பு பூஜைகளை தொடர்ந்து ஹோமகுண்டத்தில் வைக்கப்பட்டிருந்த புனித நீர் குடங்கள் கொண்டும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு பழங்கள் மற்றும் வண்ண மலர்களால் கொண்டு வீர ஆஞ்சநேயருக்கு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.மேலும் பக்தர் ஒருவரால் உபயமாக வழங்கப்பட்ட வெள்ளி பூணூல் ஆஞ்சநேயருக்கு சாற்றப்பட்டது.
தொடர்ந்து மாலை நடைபெற்ற விழாவில் ஆஞ்சநேயர் பெருமானுக்கு தங்க கவசமும் , வடை மாலையும் சாத்தப்பட்ட சிறப்பு பூஜை மற்றும் மஹா தீபாராதனை காட்டப்பட்டது . விழாவில் மதுரையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வீர ஆஞ்சநேயரை கண்குளிர தரிசனம் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *