• Sun. Mar 16th, 2025

மார்ச் 7, 8ல் சென்னையில் கைத்தறி புடவைகள் கண்காட்சி

Byவிஷா

Mar 4, 2025

வருகிற மார்ச் 7, 8 ஆகிய தேதிகளில் சென்னையில் இந்தியக் கைவினைக் கவுன்சில் நடத்தும் ‘தறி’ என்ற கைத்தறிப் புடவைகள் கண்காட்சி நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1964-ம் ஆண்டு சென்னையை தலைமையிடமாகக் கொண்டு கமலாதேவி சட்டோபாத்யாய என்பவரால் ‘இந்திய கைவினைக் கவுன்சில்’ தொடங்கப்பட்டது. லாப நோக்கமற்ற சங்கமான இது தொடங்கப்பட்டதில் இருந்து கைவினைஞர்கள் மற்றும் அதன் தயாரிப்பாளர்களின் பொருளாதார, சமூக, கலாச்சார மற்றும் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் குறித்து தேசிய அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்த, இந்திய அரசு மற்றும் பிற ஆர்வலர்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.
கடந்த 60 ஆண்டுகளாக கண்காட்சிகள், கைவினை பஜார், பட்டறைகள், செயல் விளக்கங்கள் மூலம் கைவினைஞர்கள் மற்றும் நெசவாளர்களுக்கு சந்தைப்படுத்தல் வாய்ப்புகளை இக்கவுன்சில் வழங்கி வருகிறது.
இந்நிலையில், நெசவாளர்களுக்கு உதவுவதற்காக ‘தறி’ என்ற பெயரில் கைத்தறி புடவை கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை, கதீட்ரல் சாலையில் உள்ள வெல்கம் ஓட்டலில் வரும் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் காலை 10 மணி முதல் இரவு 7 மணிவரை இக்கண்காட்சி நடைபெறுகிறது.
இக்கண்காட்சியில், குஜராத், தெலங்கானா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து 31 கைத்தறி நெசவாளர்கள் பங்கேற்று அவர்கள் தயாரித்த கைத்தறி புடவைகளை விற்பனைக்கு காட்சிப்படுத்த உள்ளனர். அதேபோல், இந்திய கைவினை கவுன்சில் நடத்தும் கமலா அங்காடியின் ஸ்டாலும் இக்கண்காட்சியில் இடம் பெறும்.
இக்கண்காட்சியில், எரிஸ்ரீ அகிம்சா பட்டுப் புடவைகள், அசாம் மாநிலத்தின் இயற்கை நிறத்தால் நெய்யப்பட்ட புடவைகள், கேரளாவின் வேதிகா என்ற கைத்தறி புடவைகள், விமோர் என்ற பாரம்பரிய புத்துயிர் பெற்ற பட்டு மற்றும் காட்டன் புடவைகள், பனாரஸ் நீலாம்பரி புடவைகள் உள்ளிட்ட பல்வேறு ரக புடவைகள் இடம் பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.