புளியங்குடி மரக்கடை சம்பவத்தில் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என சம்பவ இடத்தை பார்வையிட்ட பின் ஹெச்.ராஜா வலியுறுத்தல்.
புளியங்குடியில் விஹெச்பி நகர தலைவர் அழகு கிருஷ்ணன் மரக்கடை சில விஷமிகளால் தீ வைத்து எரிக்கப்பட்டது. அதனை பார்வையிட வந்த பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றார்.
புளியங்குடியில் கடந்த மாதம் விஹெச்பி நகர தலைவர் அழகுகிருஷ்ணன் மற்றும் அவரது உறவினரும் இணைந்து நடத்திய மரக்கடை சில விஷமிகளால் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதில் சுமார் ரூபாய் ஒரு கோடிக்கும் செய்தியாளர்களிடம் அதிகமான மரக்கட்டைகள் எரிந்து விட்டது. இதில் குற்றவாளிகளை கைது செய்ய சொல்லி இந்து அமைப்புகள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். அதனை தொடர்ந்து நேற்று பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா சம்பவ இடத்தை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட அழகு கிருஷ்ணன் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார். அவரிடம் சிசிடிவி காட்சி பதிவுகளை அழகு கிருஷ்ணன் காட்டினார் அதோடு கோரிக்கை மனுவையும் வழங்கினார்.
இது பற்றி ஹெச் ராஜா செய்தியாளர்களிடம் கூறுகையில், சம்பவம் நடந்து இருபது நாட்களுக்கு மேல் ஆகியும் குற்றவாளிகளை பிடிக்கவில்லை. சென்னையிலும் பாஜக வழக்கறிஞர் அணி செயலாளர் அஸ்வத்தாமன் அலுவலகமும் இதே போன்று தீ வைத்து எரிக்கப்பட்டது. பொருளாதார ரீதியாக இந்துக்களை முடக்க வேண்டும் என்றே விசமிகள் செய்கிறார்கள். உடனடியாக காவல்துறை நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கைது செய்து நீதி மன்றத்தில் விசாரணை செய்ய வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட அழகு கிருஷ்ணன் குடும்பத்தாருக்கு பொருளாதர ரீதியாக உதவிகள் செய்ய வேண்டும் என்றார். மேலும் ஜெய்பீம் திரைப்படம் வன்னியர்களுக்கும் பட்டியல் இன மக்களுக்கும் இடையே கலவரத்தை உண்டாக்கி அதன் மூலமாக மத மாற்ற செய்யலாம் என்பதற்காக நடிகர் சூர்யாவால் எடுக்கப்பட்டது. தமிழகத்தில் இந்து மதத்தை அழிக்க இது போன்ற ஒரு கும்பலே இருந்து வருகிறது என்றார். நிகழ்ச்சியில் பாஜக மாவட்ட தலைவர் ராமராஜா, நகர தலைவர் சண்முகம் மற்றும் பாஜக நிர்வாகிகள் விஹெச்பி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.