• Mon. Jun 5th, 2023

சூர்யாவுக்கு மிரட்டல் விடுப்போர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனு

Byகுமார்

Nov 16, 2021

நடிகர் சூர்யாவுக்கு மிரட்டல் விடுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தென்மண்டல காவல்துறை தலைவரிடம் திராவிடர் விடுதலை கழகம் சார்பில் மனு அளித்தனர்.

நடிகர் சூர்யா நடிப்பில் ஓடிடி தளத்தில் வெளியான ஜெய்பீம் திரைப்படம் கடந்த 2ம் தேதி வெளியானது. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது.

ஜெய்பீம் திரைப்படத்திற்கு பாமகவினர் எதிர்ப்பு தொடர்ந்து தெரிவித்து வரும் நிலையில், நடிகர் சூர்யாவை எட்டி உதைத்தாலோ, தாக்கினாலோ ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று மயிலாடுதுறை பாமக மாவட்ட செயலாளர் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியது.

மேலும் காடுவெட்டி குருவின் மருமகன் மனோஜ் நடிகர் சூர்யா நடித்து வெளியாகும் திரைப்படங்கள் திரையரங்கில் வெளியானால் திரையரங்குகளை கொளுத்துவோம் என பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

தொடர்ந்து பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாசும் ஜெய்பீம் திரைப்படம் குறித்து எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் நடிகர் சூர்யாவுக்கு தொடர்ச்சியாக மிரட்டல் விடுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தென்மண்டல காவல்துறை தலைவர் அன்புவை சந்தித்து திராவிடர் விடுதலை கழகம் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

நடிகர் சூர்யாவை தாக்கினால் ஒரு லட்சம் பரிசு என அறிவித்த பாமக மாவட்ட செயலாளர் பழனிசாமி மீதும், சூர்யா படம் வெளியாகும் திரையரங்குகளை கொளுத்துவோம் என பேசிய காடுவெட்டி குரு மருமகன் மனோஜ் மீதும், அதை தூண்டும் வகையில் செயல்படும் அன்புமணி ராமதாஸ் மீது நடவடிக்கை எடுக்ககோரி திராவிடர் விடுதலை கழகம் சார்பில் மனு அளித்துள்ளனர்.

நடிகர் சூர்யா மீது விடுக்கப்படும் மிரட்டல் தமிழநாட்டுக்கு விடுக்கப்படும் சவால் எனவும், நடிகர் சூர்யாவுக்கு மிரட்டல் விடுப்பவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கக்கோரி திராவிடர் விடுதலை கழக மாவட்ட செயலாளர் மணியமுதன் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *