• Fri. Apr 19th, 2024

குருப்- 4 தேர்வு – வரலாற்றில் முதல்முறையாக 7,138 பணியிடங்களுக்கு 22 லட்சம் பேர் விண்ணப்பம்

ByA.Tamilselvan

Apr 30, 2022

டிஎன்பிஎஸ்சி குருப்- 4 தேர்வுக்கு கடைசிநாளான நேற்று முன்தினம் மட்டும் 3 லட்சம்பேர் விண்ணப்பித்துள்ளனர்.
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் மற்றும் பில் கலெக்டர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பதவிகளில் 7,138 காலியிடங்களை நிரப்புவதற்காக குருப்-4 தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) கடந்த மார்ச் 30-ம் தேதி வெளியிட்டது.
இந்த ஆண்டு முதல்முறையாக தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் ஆகிய அரசு பொதுத்துறை நிறுவனங்களின் காலிப் பணியிடங்களும்குருப்-4 பணிகளில் சேர்க்கப்பட்டுள்ளன.
தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு, மார்ச் 30-ம் தேதியே தொடங்கியது. தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி எஸ்எஸ்எல்சி தேர்ச்சி என்ற போதிலும் பட்டதாரிகளும், முதுகலை பட்டதாரிகளும் போட்டி போட்டு விண்ணப்பித்தனர். முதல் 5 நாட்களிலேயே ஒரு லட்சத்து 43 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர்.
இந்நிலையில், ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தபடி, ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஏப்ரல் 28-ம் தேதி (வியாழக்கிழமை) நள்ளிரவுடன் முடிவடைந்தது. கடைசி நாளில் மட்டும் 3 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
குருப்-4 தேர்வுக்கு சுமார் 22 லட்சம் பேர் விண்ணப்பித்திருப்பதாக டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்படி, ஒரு காலியிடத்துக்கு 308 பேர் போட்டியிடுகின்றனர். குருப்-4 தேர்வுக்கு 22 லட்சம் பேர் விண்ணப்பித்திருப்பது டிஎன்பிஎஸ்சி வரலாற்றில் இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2018-ல் நடத்தப்பட்ட குருப்-4 தேர்வை 20 லட்சம் பேர் எழுதினர்.
குருப்-4 பணிகளுக்கான எழுத்துத் தேர்வு ஜூலை 24-ம் தேதி தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் நடக்க உள்ளது. எழுத்துத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றாலே அரசுப் பணி உறுதி என்பது குறிப்பிடத்தக்கது. தேர்வு முடிவுகள் செப்டம்பரில் வெளியிடப்பட்டு அக்டோபரில் பணிஒதுக்கீடு கலந்தாய்வு நடத்தப்படும் என்று டிஎன்பிஎஸ்சி ஏற்கெனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *