தமிழகத்தில் எந்தவித புகாருக்கும் இடம் தராமல் பொது தேர்வை நடத்தி முடிக்க வேண்டும் என்று தேர்வுத்துறை அறிவுறுத்தி உள்ளது. தமிழகத்தில் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம் பொதுத் தேர்வு நடைபெறுகிறது. மாநிலம் முழுவதும் கிட்டத்தட்ட 30 லட்சம் மாணவர்கள் பொதுத் தேர்வு எழுத உள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அவ்வகையில் மறுபக்கம் தேர்வு நெருங்கி வருவதால் தேர்வு மையம் அமைக்கும் பணியில் தேர்வுத் துறை தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது.
இந்நிலையில் பொதுத்தேர்வில் எந்த மாணவருக்காவது தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு(ஹால்டிக்கெட்) வழங்காமல் நிறுத்தி வைத்தால் சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சில தனியார் பள்ளிகளில் மாணவர்கள் கல்வி கட்டணம் செலுத்தவில்லை என்று கூறி நுழைவு சீட்டை தராமல் நிறுத்தி வைத்துள்ளதாக வந்த புகாரை அடுத்து அனைத்து வகையான பள்ளிகளுக்கும் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.