இதுவரை மாநில அரசு, மத்திய அரசுக்கு எத்தனையோ கடிதங்களை எழுதியுள்ளது. பொது மக்களாகிய நாம் எத்தனையோ கடிதங்களை மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு எழுதி அனுப்பியுள்ளோம். இவை அனைத்துக்கும் பதில் கிடைத்ததா என்றால் இல்லை. ஆனால் ஒரு சிருவனுடைய கடிதத்திற்க்கு பதில் அளித்துள்ளது இந்திய அரசாங்கம்.
சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த 8 வயது சிறுவன் ஆஷிக். ஐஐடி வளாகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 3 ஆம் வகுப்பு படித்து வருகிறான். படுசுட்டியான இவன் படிப்பில் மட்டுமில்லாமல் பள்ளியில் நடைபெறும் பேச்சு முதலான பல்வேறு கலை போட்டிகளில் ஆர்வமுடன் கலந்து கொண்டு பல பரிசுகளை பெற்றுள்ளான்.

இந்த சிறுவனுக்கு சமீபத்தில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளின் போது மனதில் ஒரு கேள்வி தோன்ற, அதை தனது தாயிடம் கேட்டுள்ளான். அதற்கு அவனுடைய தாயார், இந்த கேள்வியை நமது நாட்டின் குடியரசு தலைவரிடம் தான் கேட்க வேண்டும் என்று சாதாரணமாக கூறியுள்ளார்.
அதை மிகவும் சீரியஸான விஷயமாக எடுத்துக்கொண்டு, உடனே குடியரசு தலைவருக்கு தன் மனதில் தோன்றிய அந்த கேள்வியை, தனது பள்ளி நோட்டில் தனது கையெழுத்தில் கடிதம் எழுதியுள்ளன். Beloved President Uncle என்று ஆரம்பித்த அந்த கடிதத்தில்,
உலக நாடுகள் பலவற்றிற்கு தேசிய விளையாட்டு என்று ஒன்று உள்ளது. அதுபோல நமது இந்தியாவிற்கு தேசிய விளையாட்டு என்ற ஒன்று ஏன் இல்லை? நமது நாட்டின் முதல் குடிமகனாகிய தாங்கள் தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும் என்பது தான்.
இதுகுறித்த இந்த சிறுவனின் கடிதம் கிடைக்கப் பெற்ற குடியரசு தலைவர், உடனடியாக மத்திய விளையாட்டு துறைக்கு அந்த கடிதத்தை அனுப்பி விளக்கம் கேட்க… மத்திய விளையாட்டு துறையும் இது குறித்து ஆலோசித்து வருவதாக இந்த சிறுவனுக்கு பதில் அனுப்பியுள்ளது.
அதைத் தொடர்ந்து 3 ஆம் வகுப்பு படிக்கும் சிறுவனின் கேள்விக்கு நாட்டின் மிக உயர்ந்த பதவியில் உள்ள குடியரசு தலைவர் உடனடி நடவடிக்கை எடுத்து, பதில் அனுப்பியுள்ளது குறித்து அந்த சிறுவனின் தாயாரும், குடும்பத்தினரும், பள்ளியும், பள்ளி ஆசிரியர்களும் மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் அடைந்துள்ளனர்.
இந்தியாவின் தேசிய விளையாட்டு ஹாக்கி என்று நம்மில் பலர் கேட்டு அறிந்துள்ள நிலையில், அது தவறான தகவல், வதந்தி என்பதுடன், இந்தியாவிற்கு தேசிய விளையாட்டு என்பதே இதுவரை இல்லை என்பதே உண்மை…