


சாலையின் நடுவே பழுதாகி நின்ற அரசு பேருந்து- பொதுமக்கள் உதவியுடன் தள்ளி சாலையின் ஓரத்திற்கு கொண்டு சென்ற அவலம்
மதுரையில் இன்று விடுமுறை நாள் என்பதால் முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகிறது. இந்தநிலையில் மாநகரின் மைய பகுதியான மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து அலங்காநல்லூர் நோக்கி சென்ற அரசு பேருந்து பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள மேம்பாலத்தின் நடுவே பழுதாகி நின்றது.
பின்னர் பயணிகளை இறக்கிவிட்டதும் சில மாற்று பேருந்திலும், ஆட்டோக்களிலும் சென்றனர். மேலும் பேருந்து முக்கிய சாலையின் நடுவே சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக பழுதாகி நின்று கொண்டிருந்தால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதன் பின்னர் போக்குவரத்து ஊழியர்கள் வந்து பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டும் பலன் இல்லை. அதனைத்தொடர்ந்து பொதுமக்கள் உதவியுடன் பேருந்த தள்ளி சென்று சாலையின் ஓரத்தில் நிறுத்தி பழுது பார்க்கும் பணியில் ஈடுபட துவங்கியுள்ளனர்.
மகளிருக்கு இலவசமாக இயக்கப்படும் பேருந்துகள் பெரும்பாலும் கடுமையாக சேதமுற்று இருப்பதுடன் இது போன்று அடிக்கடி பழுதாகி விடுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். துறை சார்ந்த அதிகாரிகள் இதுபோன்ற பேருந்துகளை அடையாளம் கண்டு சரி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

