• Mon. Mar 17th, 2025

வாரத்தின் முதல்நாளே தங்கம் விலை உயர்வு- இன்றைய நிலவரம் என்ன?

ByP.Kavitha Kumar

Mar 10, 2025

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சற்று உயர்ந்து 64 ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கேற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வந்த தங்கம் விலை கடந்த அக்டோபர் 30-ம் தேதி ஒரு சவரன் 59 ஆயிரம் ரூபாயைக் கடந்து புதிய உச்சத்தை தொட்டது. அதனைத் தொடர்ந்து நவம்பர் மாதத் தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, கடந்த 21-ம் தேதி தங்கம் விலை 60 ஆயிரம் ரூபாயைக் கடந்து மக்களை அதிர்ச்சியடைய செய்தது. பின்னர் படிப்படியாக உயர்ந்து தங்கம் விலை 64 ஆயிரம் ரூபாயைத் தொட்டது. கடந்த சில தினங்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வந்தது. சென்னையில் சனிக்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை 50 ரூபாய் உயர்ந்து 8,040 ரூபாயாகவும், ஒரு சவரன் விலை .400 ரூபாய் உயர்ந்து .64,320 ரூபாயாகவும் இருந்தது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை 55 ரூபாய் உயர்ந்து ரூ.8,771 ஆகவும், சவரன் விலை ரூ.440 உயர்ந்து ரூ.70,168 ஆகவும் இருந்தது.

இந்த நிலையில் வாரத்தின் முதல் நாளான இன்று தங்கம் விலை சற்று அதிகரித்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து 8,050 ரூபாய்க்கும் சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து 64ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 2 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 106 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.