உத்தரகாண்ட், உத்தரபிரதேசம், கோவா,பஞ்சாப் மற்றும் மணிப்பூர் மாநில சட்டமன்ற தேர்தல் அடுத்தாண்டு நடைபெற உள்ளது. பல்வேறு கட்சிகள் ஆட்சி நாற்காலியில் அமர பல்வேறு திட்டங்களை வகுத்து வருகின்றனர். இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சியும் களமிறங்கி உள்ளது.
டில்லியில் இரண்டாவது முறை ஆட்சியை பிடித்துள்ள ஆம் ஆத்மி, அடுத்தாண்டு உத்தரகண்ட் மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளது. இதற்காக ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரகண்ட் சென்றுள்ளார்.
அப்போது, ஹரித்துவாரில் பத்திரிகையாளர்களை சந்தித்த அரவிந்த் கெஜ்ரிவால், கடந்த 2020 சட்டசபை தேர்தலில், நான் மக்களுக்கான சேவை செய்யவில்லை என்றால், டில்லி மக்கள் எனக்கு வாக்கு அளிக்க வேண்டாம் என்று கூறினேன். தேர்தலுக்கு முன் இதுபோன்று சொல்வதற்கு யாருக்கும் தைரியம் இல்லை. எங்களுக்கு அதுபோன்று வாய்ப்பு அளியுங்கள், அதன்பின் மற்ற கட்சிகளுக்கு வாக்களிப்பதை நிறுத்துவீர்கள் என்று இன்று உங்களிடம் கேட்கிறேன்.
நாங்கள் உத்தரகண்ட்டில் ஆட்சி அமைக்கும்போது, டில்லியை போன்று 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு இலவச ஆன்மீக சுற்றுப்பயணம் திட்டத்தை தொடங்கி வைப்போம். அயோத்தியாவில் இலவசமாக சாமி தரிசனம் செய்யும் வாய்ப்பை ஏற்படுத்துவோம். அதேபோல், இஸ்லாமியர்கள் அஜ்மீர் ஷெரீப் செல்வதற்கான வாய்ப்பையும், சீக்கியர்கள் கர்தார்பூர் சகிப் செல்லும் வாய்ப்பையும் ஏற்படுத்துவோம் என இவ்வாறு அவர் தெரிவித்தார்.