இந்திய சுதந்திரத்தின் 75வது ஆண்டை கொண்டாடும் வகையில் சி.ஆர்.பி.எப் வீரர்களின் கன்னியாகுமரி முதல் டெல்லி வரையிலான சைக்கிள் பயணம் இன்று தொடங்கப்பட்டது.
சுதந்திர தினத்தின் 75வது ஆண்டை முன்னிட்டு, தென்மண்டல கேரளா பள்ளிபுரம், தமிழ்நாடு, கர்நாடக மாநிலங்களை சேர்ந்த சி.ஆர்.பி.எப்., வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் 30 பேர், கன்னியாகுமரியில் இருந்து டெல்லியில் ராஜ்கோட் வரையிலான சைக்கிள் பயணத்தை இன்று தொடங்கினர். கன்னியாகுமரியில் உள்ள முக்கடல் சங்கமம் பகுதியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கேரள மாநிலத்தின் சி.ஆர்.பி.ப்., அதிகாரிகள், தமிழக அரசின் தகவல் மற்றும் தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோ தங்கராஜ், கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த், நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் விஜயகுமார், குளச்சல் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் ஜே.ஜே.பிரின்ஸ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆஸ்டின், குமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பத்திரி நாராயணன்,குமரி ஆட்சியர் மா. அரவிந்த் ஆகியோர் பங்கேற்றனர்.
சைக்கிள் பயணத்தை கொடியசைத்து தொடங்கிய வைத்த பின் தமிழக தகவல் மற்றும் தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: இந்திய சுதந்திர போராட்டத்தின் போது உயிரை மாய்த்துக்கொண்ட தலைவர்கள், ரத்தம் சிந்திய தலைவர்களின் உன்னதமான தியாகத்தை நினைவு கூர்ந்தார். விழாவில் பணியின் போது உயிர் நீத்த இருவர் குடும்பத்தை சேர்ந்த இரு பெண்கள் கவுரவிக்கப்பட்டார்கள். கன்னியாகுமரியில் இன்று தொடங்கும் இந்த சைக்கிள் பயணம் அடுத்த மாதம் அக்டோபர் 2ம் தேதி அன்று டெல்லி ராஜ்கோட்டில் நிறைவடையும் என்பது குறிப்பிடத்தக்கது.