தேனி அருகே பாண்டி முனீஸ்வரர் கோவிலில் கிடா வெட்டி சக்தி பூஜை நடைபெற்றது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே பிச்சம்பட்டிக்கு மேல்புறம் பாண்டி முனீஸ்வரன் கோவில் அமைந்துள்ளது. இங்கு விநாயகர், ஆச்சி கிழவி ஒச்சாயி, சின்னன், மாயன்,காளீஸ்வரி ஆகிய தெய்வங்களுக்கு தனித்தனி சந்நிதிகள் உள்ளன. சிறப்பு வாய்ந்த இக்கோயிலின் 21வது சக்தி பூஜை திருவிழா நேற்று முன்தினம் நள்ளிரவு தொடங்கியது. அப்போது 15 நாட்கள் விரதமிருந்து காப்பு கட்டிய பக்தர்கள் கிடா வெட்டி ஆகாச கருப்புக்கு படையல் இட்டனர். தொடர்ந்து 5 நாட்கள் திருவிழா நடைபெறுகிறது. ஒவ்வொரு நாளும் பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தி வருகின்றனர். தினமும் கிடா வெட்டி அசைவ விருந்து பரிமாறப்பட்டு வருகிறது. தேனி மாவட்டம் மட்டுமில்லாது பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடனை நிறைவேற்ற வந்த வண்ணம் உள்ளனர். விழாவை முன்னிட்டு பிச்சம்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள் மின் விளக்குகளால் களைகட்டி உள்ளது.