பொதுமக்களின் தாகம் தணிக்கும் வகையில், சென்னையில் கட்டணமில்லா ஏடிஎம் குடிநீர் சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். முதற்கட்டமாக சென்னையில் 50 இடங்களில் இச்சேவை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
சென்னையில் பொதுமக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்க வேண்டும் என்கிற திட்டத்தை கையிலெடுத்துள்ள சென்னை மாநகராட்சி மற்றும் குடிநீர் வாரியம் இணைந்து குடிநீர் ஏடிஎம்களை கொண்டு வந்துள்ளன. முதல்கட்டமாக கடற்கரை, பேருந்து நிலையம், பூங்கா, பள்ளி, கல்லூரி பகுதிகள், மார்க்கெட் பகுதிகள் என பொதுமக்கள் அதிகம் கூடும் 50 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு குடிநீர் ஏடிஎம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி பட்டினப்பாக்கம், மயிலாப்பூர் மார்கெட், சைதாப்பேட்டை மற்றும் கிண்டி பேருந்து நிலையங்கள், சிவன் பூங்கா, அண்ணா நகர் டவர் பூங்கா ஆகிய இடங்களில் குடிநீர் ஏடிஎம்-கள் அமைந்துள்ளன.
இந்த ஏடிஎம்களை பொறுத்த வரையில் 150 மில்லி லிட்டர் மற்றும் 1 லிட்டர் என்று இரண்டு வகையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை இலவசமாக பெறலாம். பொதுமக்கள் தங்களின் வாட்டர் பாட்டிகளில் தண்ணீரை பிடித்து பருகும் வகையில் இந்த ஏடிஎம் அமைக்கப்பட்டுள்ளது. 1 மணி நேரத்திற்கு 250 லிட்டர் குடிநீர் வழங்கும் வகையில் டாங்குகள் அமைக்கப்பட்டு அங்கிருந்து குடிநீர் எடுக்கப்பட்டு அதிநவீன நீர் சுத்திகரிப்பு அமைப்புகள் முன் வடிகட்டுதல், ரிவர்ஸ் ஆஸ்மோசிஸ் மற்றும் புற ஊதாக் கதிர்கள் ஆகியவை கொண்டு சுத்திகரிப்பு செய்யப்பட்டு ஏடிஎம்கள் மூலம் வழங்கப்படுகிறது.
மேலும், 24 மணி நேரமும் தடையின்றி செயல்படும் வகையிலும், நீர்இருப்பு இல்லாத நேரத்தில் கடவுச்சொல் மூலம் நீரை ரீசார்ஜ் செய்யும் வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது. பேட்டரி மூலம் இயங்கும் இந்த விநியோக அமைப்பில், கடைசி 50 முறை ரீசார்ஜ் செய்யப்பட்ட பரிவர்த்தனைகளின் விவரங்களையும் பயனர்கள் பார்க்க முடியும். கட்டண வசூலுக்காக ஸ்மார்ட் கார்டு மற்றும் நாணயங்கள் பயன்படுத்தும் முறையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நீர் ரீசார்ஜ் மற்றும் விநியோகம் தொடர்பான தகவல்கள் குறுஞ்செய்தி மூலம் பயனர்களுக்கு உடனுக்குடன் தெரிவிக்கப்படும். இந்த எம்டிஎம்களை தொடர்ந்து கண்காணிக்க சிசிடிவி கேமராக்கள் மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள தனி குழு அமைக்கப்பட்டுள்ளன. இந்த குடிநீர் ஏடிஎம்களின் சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். சென்னை மெரினாவில் நடைபெற்ற விழாவில் குடிநீர் ஏடிஎம்- இயந்திரத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வந்த அவர், பாட்டிலில் தண்ணீர் பிடித்து நீரை அருந்தினார்.
சென்னையில் கட்டணமில்லா ஏடிஎம் குடிநீர் சேவை
