• Thu. Apr 25th, 2024

சிக்கலில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்…

Byமதி

Oct 18, 2021

தமிழகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் ஆட்சியில் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை சேர்த்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டு அமைச்சர்களின் வீடுகள் மற்றும் சொந்தமான இடங்களில் அடிக்கடி சோதனை நடத்தி வருகிறார்கள்.

சமீபத்தில், முன்னாள் அமைச்சர்கள் கே.சி.வீரமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி. வேலுமணி ஆகியோரது வீடுகளில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. தற்போது அந்தவரிசையில் 10 ஆண்டுகளாக சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த சி. விஜயபாஸ்கர் வீட்டில் இன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

விஜயபாஸ்கரின் சொந்த ஊரான புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர். இவர் அமைச்சராக இருந்த காலத்தில் புதுக்கோட்டை உள்பட பல இடங்களில் வருமானத்துக்கு அதிகமான சொத்துக்களை வாங்கி குவித்திருப்பது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே, இலுப்பூர் மற்றும் அதனை சுற்றியுள்ள 29 இடங்களில் சோதனை நடைபெற்றது.

சென்னையில் கீழ்ப்பாக்கம் டெய்லர்ஸ் ரோடு, சேத்துப்பட்டு ஹாரிங்டன்ரோடு ஆகிய 2 இடங்களில் அடுக்குமாடி குடியிருப்பில் விஜயபாஸ்கருக்கு சொந்தமான வீடுகள் உள்ளன. இந்த 2 வீடுகளிலும் சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்பு போலீசார் பல்வேறு ஆவணங்களை கைப்பற்றியதாக கூறப்படுகிறது.

டெய்லர்ஸ் ரோடு வீட்டில் நடைபெற்ற சோதனையின் போது, வீட்டின் முன் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, நிர்வாகிகள் மற்றும் ஆதர்வாளர்கள் திரண்டனர். மேலும் நிர்வாகிகள் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினர்.

புதுக்கோட்டை மற்றும் சென்னையை தவிர செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோவை, திருச்சி ஆகிய 6 மாவட்டங்களில் 43 இடங்களில் விஜயபாஸ்கர் உறவினர்கள் மற்றும் அவரது உதவியாளர்கள் வீடுகளிலும் அதிரடி சோதனை நடைபெற்று வருகிறது.

இதுதவிர விஜயபாஸ்கரின் சகோதரர் நடத்தி வரும் மதர் தெரசா அறக்கட்டளை நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மதர் தெரசா பாலிடெக்னிக், கல்வி நிறுவனங்களிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.

கடந்த 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது வேட்புமனு தாக்கல் பிரமாண பத்திரத்தில் சொத்து மதிப்பு ரூ. 6 கோடி 44 லட்சத்து 91 ஆயிரத்து 310 என விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
ஆனால் தற்போது நடத்தப்பட்ட லஞ்ச ஒழிப்பு ஆய்வில் அவர் சொத்து மதிப்பு ரூ.27 கோடிக்கும் மேல் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் எப்.ஐ.ஆரில் குறிப்பிட்டுள்ளனர்.

இது தொடர்பாக விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் விஜயபாஸ்கர் பெயர் முதலாவதாகவும், ரம்யாவின் பெயர் 2-வதாகவும் இடம் பெற்றுள்ளது.

மக்கள் மத்தியில் நம்பிக்கைக்கு உரிய நபராக இருந்தவர் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர். ஆனால் இந்த சொத்து குவிப்பு அவர் மேல் உள்ள நம்பிக்கையை குலைக்கும் வகையில் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *