• Sat. Apr 20th, 2024

மாஜி அமைச்சர் வேலுமணியின் சொத்துக்குவிப்பு வழக்கை ரத்து செய்ய முடியாது.. ஹைகோர்ட்

ByA.Tamilselvan

Nov 30, 2022

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் சொத்துக்குவிப்பு வழக்குகளை ரத்து செய்ய முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது…
எஸ்.பி.வேலுமணி தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.. ஆனால், டெண்டர் முறைகேடு வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் வேலுமணி மீதான சொத்துகுவிப்பு வழக்கு தொடர்பாக முறையான ஆதாரங்களை திரட்டியும், முழுமையான விசாரணைகளை நடத்தியும், சட்டத்திற்கு உட்பட்டும், நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதிலும் திமுக அரசு உறுதியாகவே இருந்தது.. வேலுமணி தரப்பில் 3 முறை ரெயிடுகள் நடத்தப்பட்ட நிலையிலும்கூட, யாரையும் திமுக தரப்பு அவசரப்பட்டு கைது செய்யவில்லை..
இந்த வழக்கு தொடர்பாக அறப்போர் இயக்கம் சார்பாக வழக்கறிஞர் ஆர்.சுரேஷ் ஆஜராகி ஒரே ஐபி முகவரியில், ஒரே இடத்தில் இருந்து டெண்டர்களை முன்னாள் அமைச்சருக்கு நெருங்கியவர்கள் விண்ணப்பித்து முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாகவும், இந்த டெண்டர் முறைகேடு ஒதுக்க துணையாக இருந்த அரசு அதிகாரிகளுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என்றும் அறப்போர் இயக்கம் சார்பில் வாதிடப்பட்டது.
அதேபோல, திமுகவின் ஆர்.எஸ்.பாரதி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் புலன் விசாரணை அதிகாரியின், விசாரணை முடிவை அடிப்படையாகக் கொண்டுதான் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் பழிவாங்கும் நடவடிக்கையில்லை என்றும் வாதிடப்பட்டது. இப்படி அறப்போர் இயக்கம் மற்றும் திமுக சார்பில் வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பி.வேலுமணி மீது வழக்குகள் பதிவு செய்தது.
வேலுமணி தரப்பில், தனக்கெதிரான புகாரில் எந்த முகாந்திரமும் இல்லை ஒளிவுமறைவற்ற முறையில் டெண்டர் கோரப்பட்டதாகவும், அதில் தனக்கு எந்த பங்கும் இல்லை என்றும், அந்த குழுவிலும் இடம்பெறவில்லை என்றும் வேலுமணி தரப்பில் வாதிடப்பட்டது.
இப்படி, அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், வேலுமணி தாக்கல் செய்திருந்த வழக்குகளின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், இந்த வழக்குகளில் இன்று பிற்பகல் 2:30 மணிக்கு நீதிபதிகள் தீர்ப்பளிக்க உள்ளதாக தகவல் வெளியானது.. எடப்பாடி பழனிசாமியின் தீவிர ஆதரவாளரான வேலுமணி மீதான வழக்குகளின் தீர்ப்பு, இன்றைய தினம் மிகப்பெரிய எதிர்பார்ப்பினையும் அரசியல் வட்டாரத்தில் ஏற்படுத்தி வந்தது. இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் சொத்துக்குவிப்பு வழக்குகளை ரத்து செய்ய முடியாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என எஸ்.பி.வேலுமணி தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நீதிபதிகள் பி.என். பிரகாஷ், ஆர்.எம்.டி. டீக்காராமன் ஆகியோர் இந்த தீர்ப்பை அதிரடியாக வெளியிட்டனர்.. அதேபோல, முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கை நீதிபதிகள் ரத்து செய்தனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *