• Tue. Apr 23rd, 2024

முட்டாளாக்கும் முகநூல் காதல்

Byத.வளவன்

Jan 8, 2022

அந்தக் காலத்தில் காதலுக்கு தூதாக தோழியையம் தாதியையம் அனுப்பினர். இப்போது பேஸ் புக் சேதியை அனுப்புகின்றனர். ஆனால், இந்த தூது சிலவேளை தோதாக இல்லாமல் தீதாக அமைந்துவிடுகிறது.


பேஸ்புக் மூலமாக இளம்பெண்களை காதல் வலையில் வீழ்த்திய இளம்பொறியாளர் ஒருவரின் வழக்கு முகநூல் காதலின் முகத்திரையை கிழிக்கிறது.

முகநூலில் அதிக பெண் நண்பர்களை கொண்ட இவர் ‘சாட்டிங்’ மூலம் தன்னை வசதி படைத்தவராக காட்டிக் கொள்வார். அடுத்து, பெண்களை நேரில் சந்தித்து பேசுவார். இறுதியில் அவர்களுடன் செல்ஃபி முதல் செக்ஸ் படங்கள் வரை எடுத்து வைத்துக் கொண்டு சாவதானமாக மிரட்டுவார். இவரால் இதுவரை 11 பெண்கள் பாதிக்கப்பட்டுள்னர்.காதலில் பொய் சகஜம். ஆனால், காதலே பொய்யாக இருப்பது முகநூலின் அம்சம். அங்கு உண்மைகளை மறைப்பதற்கான சாத்தியம் அதிகம்.

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த வினித் குமார்(24) மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஜோதி கோரியை முகநூல் மூலம் காதலித்துள்ளார். 44 வயதான ஜோதி கோரி தன் வயதை பாதியாக கூறியதை நேரில் அறிந்த வினித் குமார் அவரை சுட்டுக் கொன்றதுடன் தானும் தற்கொலை செய்து கொண்டார்.
வினித்குமார் உயிரிழப்பதற்கு முன் அளித்த வாக்குமூலத்தில் எனது காதலிக்கு 44 வயது. திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளன என்று சந்தித்தபோது தான் தெரிந்தது எனக் குறிப்பிட்டுள்ளார்.இதில் வேடிக்கை என்னவென்றால் ஜோதியிடம் அவர் கணவர் அன்பை பொழிந்திருக்கிறார். வினித்குமாரை காதலிக்க ஜோதி பயன்படுத்தியது அவர் கணவர் அன்பளித்த மடிக்கணினி தானாம்.

நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர் ஒரு இளைஞர் துபாயில் உள்ள கப்பல் கட்டும் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அவருடைய மனைவி ஜெனிபரும், மகளும் ஊரில் வசித்து வந்தனர். அவ்வப்போது ஊருக்கு வந்து மனைவி, மகளை பார்த்துச் சென்றார். ஒருநாள், மகளை பெற்றோரிடம் ஒப்படைத்துவிட்டு நெல்லைக்கு ஜவுளி எடுக்க செல்வதாக கூறிச்சென்ற ஜெனிபர் திரும்ப வரவில்லை.இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் விக்கிரமசிங்கபுரம் போலீஸில் புகார் செய்ய, ஜெனிபரின் மின்னஞ்சல்கள் மூலம் ஈரோட்டை சேர்ந்த எலெக்ட்ரீஷியன் தொடர்பில் இருந்தது தெரியவந்தது. இங்கு போலீசார் விசாரித்து கொண்டிருந்தபோது ஈரோட்டில் அவர்கள் தனிக்குடித்தனம் நடத்திக்கொண்டிருந்தனர்.அங்கிருந்து ஜெனிபரை போலீசார் விக்கிரமசிங்கபுரத்துக்கு அழைத்து வந்தனர். காதலனை விட்டுவிட்டு தங்களுடன் வந்துவிடும்படி ஜெனிபரின் பெற்றோர் வருந்தி அழைத்தனர். குழந்தை காட்டி பாசமூட்டினர். ஆனால், அவர் அனைத்தையும் மறுத்துவிட்டு காதலனுடனே போய்விட்டார்.3 ஆண்டுகளுக்கு முன்பு முகநூலில் எலக்ட்ரீசியனின் அறிமுகம் கிடைத்துள்ளது. பின்னர் போனிலும் பேச ஆரம்பித்தனர். கணவர் வெளிநாட்டில் இருந்ததால், இதை யாரும் கண்டிக்கவில்லை. அயல் நாட்டில் கணவர் இருந்த நிலையில் இவர் காட்டிய அன்புக்கு ஜெனிபர் அடிமையாகிப்போனார். அவ்வப்போது அவரை வரவழைத்து ரகசியமாக சந்தித்து சந்தோஷித்துள்ளார். நாளடைவில் இந்த காதல் யாராலும் பிரிக்க முடியாத அளவுக்கு போய்விட்டது.

காதலை நோய் என்பார்கள் நமது முன்னோர்கள். முகநூல் காதலும் முற்றிய நோயாகவே இருக்கிறது. நெதர்லாந்தைச் சேர்ந்த அலெக்சாண்டர் பீட்டருக்கும்(41) சீனாவைச் சேர்ந்த ஜாங்(26) என்ற பெண்ணுக்கும் முகநூல் காதல். காதலியை நேரில் சந்திக்க முடிவு செய்து சீனாவுக்கு புறப்பட்டார் பீட்டர். இந்த தகவலை நம்பாத ஜாங் அவரை வரவேற்க வரவில்லை. விமான நிலையத்திலேயே பகலிரவாக பத்து நாட்கள் காத்திருந்தும் காதலி வராததால் பீட்டர் உடல்நிலை மோசமானது. விமான நிலைய ஊழியர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இங்கு காதலியை காண வந்த முகநூல் காதலன் நோய்வாய்ப்பட்டான். இன்னொரு இடத்தில் காதலனை காணவந்த முகநூல் காதலி உயிரையே விட்டாள்.


பிரிட்டனின் செஷிரேவை சேர்ந்த நர்ஸ் அங்கெலா ஸ்லின்(45) 3 குழந்தைகளின் தாய். இவருக்கு இந்தியாவை சேர்ந்த ஜஸ்பால் சிங் மீது முகநூல் காதல் ஏற்பட்டு, தனது கணவர் ஸ்டீபனிடம் கூறாமல் 15 முதல் 24 வயது வரையான தனது பிள்ளைகளிடம் மட்டும் தெரிவித்துவிட்டு இந்தியா வந்துள்ளார். வந்த இடத்தில் காதல் நோயுடன் நிமோனியாவும் தொற்றிக்கொள்ள, மருத்துவ சிகிச்சை பலனளிக்காமல் அங்கெலா உயிரிழந்தார். நர்சின் ‘அமர‘க் காதல் நோயால் முடிந்தது.

சில முகநூல் காதல்கள் உயிரோடு பணத்தையும் பறிக்கின்றன. மேற்கு ஆஸ்திரேலிய பெர்த் நகரைத் சேர்ந்த பெண், ஆலன் மெக்கர்ட்டி என்பவருடன் பேஸ்புக்கில் நண்பராகி உள்ளார். ஸ்காட்லாந்தில் பிறந்து ஆஸ்திரேலியாவில் வசித்து வருவதாக அந்த ஆலன் மெக்கர்ட்டி பெண்ணிடம் கூறியுள்ளார். காதல் போதையை ஏற்றிய நிலையில், உள்அலங்கார தொழிலில் ஈடுபட்டுள்ள தனக்கு பணம் தேவைப்படுவதாக கூறி தனது பெயருள்ள உள்அலங்கார தொழில் நிறுவன இணைய முகவரியையும் அளித்துள்ளார்.இதை நம்பிய அந்தப் பெண் ரூ.1.95 கோடி கொடுத்துள்ளார். பணம் அனுப்பிய பின்புதான், அமெரிக்காவின் கலிபோர்னியாக்காரனின் முகநூல் புகைப்படத்தை திருடி, உண்மையான உள் அலங்கார நிபுணர் ஆலன் மெக்கார்ட்டி பெயரில் நைஜீரியாவை சேர்ந்தவர்கள் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இவர்களின் மோசடி வலையில் சிக்கி நியூ சவுத் வேல்ஸ் பெண் ரூ.32.5 லட்சத்தையும், டாஸ்மானியா பெண் சில லட்சங்களையும் இழந்துள்ளனர். ஆண்களின் ஏமாற்றுக் கருவியாக இருக்கும் காதல். முகநூலில் இன்னும் கூர்மை பெறுகிறது. காதலை முழுமையாக புரிந்து நமது முன்னோர்கள் அதன் தன்மை கருதியே காமம் என்றே அழைத்தனர். காதலின் அடுத்த கட்டம் காமம்தான்.

நாகர்கோவில் ராமன்புதூரைச் சேர்ந்த 21 வயது இளம்பெண் தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் கல்லூரி விடுதியில் தங்கி பிஎஸ்சி இறுதி ஆண்டு பயின்று வந்தார். அதே நாகர்கோவில் ராஜாவூரை சேர்ந்த ஜோ(26) திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள பொறியியல் கல்லூரியில் டெக்னீஷியனாக பணியாற்றி வந்தார். இவர்களுக்கிடையே முகநூலில் மூன்று மாதமாக பழக்கம். இருவரும் ஸ்டேட்டஸ் பாராமல் ஸ்டேட்டஸில் காதலித்து வந்துள்ளனர்.
ஒருமுறை விடுமுறைக்காக வீடு சென்ற கேத்ரின் கல்லூரிக்கு திரும்பிய போது அவருடன் ஜோவும் பஸ்சில் பயணம் செய்துள்ளார். தூத்துக்குடிக்கு வந்த இவர்கள் அங்குள்ள தியேட்டரில் பகல் காட்சி பார்த்துள்ளனர். பால்கனியில் யாருமில்லாத நிலையில் பழம் நழுவி பாலில் வழுந்தது. பருவ சுவை பருகிய பின் அந்த மாணவியை பஸ் நிலையத்தில் விட்டு விட்டு ஜோ தலைமறைவானார். அவரை பழிவாங்க நினைத்த காதலி காரில் வந்த மர்ம நபர் ஒருவர் மயக்க மருந்தடித்து கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கதைவிட அதிர்ச்சியடைந்த பெற்றோர் தூத்துக்குடி போலீசாருக்கு தகவல் தர, விசாரணையில் பெண்ணின் நாடகம் வெளிப்பட்டது.

முகநூல் காதல் எல்லாம் மோசம் என்றில்லை. அமெரிக்காவில் ஆண்டொன்றுக்கு 2,077,000 மக்கள் முகநூல் மூலம் காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள். முகநூல் நிறுவன உரிமையாளர் சக்கர்பேர்க் கூட அதன்மூலமே தனது பழைய காதலியை கண்டடைந்தார்.பாகிஸ்தானை சேர்ந்த இஸ்கான் என்ற இளைஞரை காதலித்த இந்தியாவை சேர்ந்த மெகருன்னிசா சுற்றுலா விசாவில் எல்லை கடந்துவந்து கலாம் பள்ளத்தாக்கில் காதலனை கண்டுபிடித்து திருமணம் செய்துகொண்டார்.

முகநூலில் இணைவோரில் 37% பேர் அன்பை தேடி அலையும் நெஞ்சினர் தான். அதற்கேற்ப அன்பு தேடும் அவல நெஞ்சங்களுக்கு அடைக்கலமாக இருப்பதோடு காம போருக்கு தயாராகும் காளையருக்கு படைக்கலமாகவும் முகநூல் பயன்படுகிறது. இதில் போலி பெயரில் கணக்கு வைக்கலாம் என்பது முதல் வசதி. சுயவிவரங்களை பொய், புனைவுகள் சோதனைக்கு அப்பாற்பட்டவை ஆதலால் வானவில் கதை அளக்கலாம். வானவில்லையும் வளைக்கலாம். பெரும்பாலும் முகநூலில் பொய்யான விவரங்களையே குறிப்பிடுகின்றனர். ‘செட்டிங்’ என்னும் அரட்டைக்கு அதிக பொய் என்று அர்த்தம். பொய்யாக ஆரம்பிக்கும் தொடர்புகள் காலப்போக்கில் காதலாக கனிகிறது. இதனால் கொலை, தற்கொலை செய்யும் அளவுக்கு நிலை மோசமாகிறது.

ஆண்கள் அறிந்தே இதை பயன்படுத்துவதாலும் பெண்கள் ஏதும் தெரியாமல் அகப்படுத்துவதாலும் ஏமாற்றமும் இழிவும் அவர்களுக்கே உரித்தாகிறது. ஏமாறும் பெண்கள் பண்பாடு கருதி அதை வெளியில் சொல்லாமல் இருப்பதே இத்தகைய காமுகர்கள் தண்டிக்கப்படாமல் இருக்க பிற அப்பாவி பெண்கள் பாதிக்கப்படவும் காரணமாகிறது.

காதல் கூட மானத்தின் ஒரு பரிமாணம், பண்பாட்டின் பரிணாம் என்று உணர்ந்தால் அவசரப்பட்டு ஆபத்தை தேடமாட்டார்கள். ஊடகத்தில் ஊதி பெரிதாக்கப்பட்ட காதல் இளைஞர்கள் உள்ளங்களில் ஊஞ்சலாடுகிறது. அது ஒரு பருவ விளையாட்டாக மாறிப்போனது.அறிமுகம் இல்லாத ஆண்களின் நட்பே ஆபத்து. அதையும் காதல், பாலுறவு வரை அனுமதிப்பது என்பது உச்சபட்ச அலட்சியம் என்பதை நமது பெண்கள் காலங்கடந்தே உணர்கின்றனர். சமூக வலைத்தளத்தில் இணைவதே சமூக அந்தஸ்தாகவும் பெருமையாகவும் கருதும் மனப்போக்கு எள்ளி நகையாடத்தகுந்தது. தற்போது அதிலிருப்போரில் பாதிப்பேருக்கு மேல் அது தேவையற்றதாகவே இருக்கிறது. நிஜக்காதலே பொய்யாகிப் போன இந்த நவீன யுகத்தில் தொலைபேசி காதல், இணையதள காதலை வளர்த்தால் அது உயிராபத்திலும் பொருள் பறிப்பிலும் நிம்மதி இழப்பிலும் தான் முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *