• Sat. Mar 22nd, 2025

குலதெய்வ கோவில்களில் மக்கள் சாமி தரிசனம்

ByP.Thangapandi

Feb 27, 2025

மாசி சிவராத்திரியை முன்னிட்டு, உசிலம்பட்டி பகுதியில் குல தெய்வ கோவில்களில் விடிய விடிய லட்சக்கணக்கான மக்கள் குவிந்து சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 100க்கும் அதிகமான குல தெய்வ கோவில்கள் உள்ளன.

பெரும்பாலும் மாசி சிவராத்திரி என்றால் சிவனுக்கு உகந்த தினமாக சிவன் கோவில்களில் பக்தர்கள் அதிகம் கூடும் சூழலில், தென் மாவட்டங்களில் குறிப்பாக உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த மக்கள் மாசி சிவராத்திரி தினத்தில் முன்னோர் வழிபாட்டு முறையான குல தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவதை காலம் காலமாக செய்து வருகின்றனர்.

அதன்படி மாசி சிவராத்திரியை முன்னிட்டு உசிலம்பட்டி பகுதியில் உள்ள குல தெய்வ கோவில்களுக்கு லட்சக்கணக்கான மக்கள் வந்து சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.

மேலும் பொங்கல் வைத்தும், மொட்டை போட்டும், கிடா வெட்டியும் தங்கள் நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினர்.

இந்த மாசி திருவிழாவிற்காக நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் வசிக்கும் இந்த குல தெய்வங்களுக்கு பாத்தியப்பட்ட சொந்தங்கள் லட்சக்கணக்கானோர் ஒன்று சேர்ந்து இரவு முழுவதும் விடிய விடிய திருவிழா எடுத்து முன்னோர் வழிபாட்டு முறையை பின்பற்றி வருகின்றனர்.