உலகப் புகழ் பெற்ற வேளாங்கண்ணி மாதா பேராலய திருவிழா இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருவிழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், வேளாங்கண்ணி போலீஸ் வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டது.
நாகப்பட்டினம் மாவட்டம் உலகப் புகழ் பெற்ற வேளாங்கண்ணி மாதா பேராலய ஆண்டு திருவிழா இன்று மாலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்குகிறது. கொரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் வெளி மாநிலம் மற்றும் தமிழகத்தில் இருந்து பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. மேலும் பேராலய வளாகத்தின் உள்ளேயே திருவிழா நடைபெற உள்ளதால், அதற்கான ஏற்பாடுகளை வேளாங்கண்ணி பேராலய நிர்வாகம் செய்துள்ளது இதில் பாதிரியார்கள் மற்றும் பணியாளர்கள் மட்டுமே பங்கேற்க உள்ளனர். இந்நிலையில் வெளியூர்களில் இருந்து வேளாங்கண்ணிக்கு வரும் பேருந்துகள் பேருந்து நிலையத்திற்கு செல்லாமல் ஆர்ச்சில் இருந்து தடுத்து நிறுத்தப்பட்டு அங்கிருந்து திருப்பி விடப்படுகின்றன. பக்தர்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த கிழக்கு கடற்கரை சாலை ஆர்ச், செருதூர், மாத்தாங்காடு, பரவை உள்ளிட்ட 19 சோதனைச் சாவடிகள் அமைத்து அங்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவஹர் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு அவர்கள் உள்ளூர் நபர்களை தவிர மற்றவர்களை திருப்பி அனுப்பும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே திருவிழாவில் பங்கேற்க வெளியூர் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், வேளாங்கண்ணி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள 1500 வணிக கடைகள், 250 தனியார் தங்கும் விடுதிகள் இழுத்து மூடப்பட்டுள்ளன. மேலும் பேராலயம் பேருந்து நிலையம், கடற்கரை கடைத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் பக்தர்களின் நடமாட்டத்தை கண்காணிக்க அப்பகுதி முழுவதும் போலீசாரின் வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதால், வேளாங்கண்ணி நகரம் வெறிச்சோடி காணப்படுகிறது. லட்சகணக்கான பக்தர்கள் கலந்து கொள்ளும் திருவிழா கொரனா தடை உத்தரவு காரணமாக பக்தர்கள் இன்றி நடை பெறுகிறது.