• Sat. Apr 20th, 2024

கிணற்றில் விழுந்த மூதாட்டியை பத்திரமாக மீட்ட தீயணைப்புத்துறையினர்..,
குவியும் பாராட்டுக்கள்..!

Byவிஷா

Apr 23, 2022

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த குள்ளப்பநாயக்கன்பட்டி பகுதியில் ராமசாமி என்பவருக்கு சொந்தமான 100 அடி ஆழ விவசாய கிணறு உள்ளது. இந்த கிணற்றில் ராமசாமியின் தாயார் பாவாயி (85) என்பவர் திடீரென தவறி விழுந்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் உடனடியாக ராசிபுரம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு ராசிபுரம் தீயணைப்பு துறை அலுவலர் சந்திரசேகரன் தலைமையில் வீரர்கள் விரைந்து வந்தனர். இதன் பின்னர் துரிதமாக செயல்பட்டு 85 வயது மூதாட்டியை பத்திரமாக உயிருடன் மீட்டனர். இந்த 100 அடி ஆழ கிணற்றில் 40 அடிக்கு தண்ணீர் இருந்தது. ஆனாலும் தவறி விழுந்த மூதாட்டி பாவாயி கிணற்றில் இருந்த மோட்டார் பம்ப் குழாயை கெட்டியாக பிடித்துக்கொண்டதால் உயிர் தப்பினார். தகவல் தெரிவிக்கப்பட்டதுமே சம்பவ இடத்திற்கு விரைவாக வந்த தீயணைப்பு துறையினர் மூதாட்டிக்கு மூச்சு திணறல் ஏற்படுவதற்கு முன்னதாகவே கயிறுகளை கட்டி மீட்டது குறிப்பிடத்தக்கது. எனவே துரிதமாக செயல்பட்டு பாட்டியை மீட்ட தீயணைப்பு துறையினருக்கு குடும்பத்தினரும், ஊர் மக்களும் நன்றி தெரிவித்தனர். இந்த சம்பவம் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த குள்ளப்பநாயக்கன்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:
இங்குள்ள 100 அடி ஆழ விவசாய கிணற்றில் மூதாட்டி பாவாயி தவறி விழுந்ததுமே நாங்கள் மிகுந்த அச்சம் அடைந்தோம். கிணற்றின் உள்ளே சுவாசிக்க காற்று இருக்குமோ? இருக்காதோ? என பயந்துகொண்டே இருந்தோம். ஆனாலும் புகார் அளித்த 10 நிமிடத்தில் தீயணைப்பு துறை வீரர்கள் பறந்து வந்து மூதாட்டியை எந்தவித காயமும் இல்லாமல் பாதுகாப்பாக மீட்டு வந்து விட்டனர். இந்த துரித நடவடிக்கை பாராட்டத்தக்கது. இவ்வாறு கிராம மக்கள் கூறினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *