சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள செவல்பட்டியில் விவசாய கிணற்றின் அருகில் இருந்த மோட்டர் அறை சுவர் இடிந்து கிணற்றுக்குள் விழுந்ததில் பெண் உயிரிழந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், அப்பெண்ணை தேடும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். மீட்பு பணி தொடர்ந்து சுமார் 13 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

திருப்பத்தூர் அருகே உள்ள சித்தப்படியை சேர்ந்தவர் ராஜு. இவர் விறகு வெட்டும் கூலித் தொழில் செய்து வருகிறார். இவருடைய மனைவி அஞ்சலை என்பவர் சித்தபட்டி அருகே உள்ள செவல்பட்டியில் சோமன் ஆசிரியர் என்பவர் வயலில் களையெடுத்தல், தென்னை மட்டை எடுத்தல் உள்ளிட்ட வயல் வேலைகளில் தினக்கூலியாக இருந்து வந்துள்ளார்.

வழக்கம்போல நேற்று அதிகாலை வீட்டில் இருந்து கிளம்பி வயலுக்கு வேலைக்காக வந்த அஞ்சலை நேற்று இரவு 8 மணி ஆகியும் வீட்டிற்கு வராததைக் கண்டு வேலைக்கு சென்று திரும்பிய கணவர் ராஜு தனது குழந்தைகளிடம் அம்மா எங்கே என்று விசாரித்துள்ளார். அப்போது அவரது பிள்ளைகள் கொடுத்த தகவலின் அடிப்படையில் செவல்பட்டியில் உள்ள சோமன் ஆசிரியரின் வயலுக்கு தனது மூத்த மகள் ரஞ்சிதாவுடன் வந்து பார்த்துள்ளார்.

அப்பொழுது விவசாய கிணற்றில் மோட்டார் அறையின் சுவர் சரிந்து விழுந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.அதனருகே அஞ்சலை கொண்டுவந்த மதிய சாப்பாடு கூடை மற்றும் அவர் அணிந்திருந்த செருப்பு இருந்ததை கண்டு பதறி போன அஞ்சலையின் கணவர் ராஜு தனது கிராமத்தினரிடம் தகவல் தெரிவிக்க கிராமத்தினர் எஸ்.எஸ்.கோட்டை போலீசார் மற்றும் திருப்பத்தூர், சிங்கம்புணரி தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
ஒருவேளை விவசாய கிணற்றுக்குள் மோட்டார் அறை இடிந்து விழுந்ததில், அஞ்சலை என்ற பெண் உயிரிழந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தீயணைப்பு படையினர், சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இரவில் இருந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள தீயணைப்புத்துறையினர் இப்பகுதியில் பெய்த தொடர் மழையினால், கிணற்றுக்குள் அதிகரித்துள்ள தண்ணீரை மோட்டார் மூலம் வெளியேற்றி வருகின்றனர்.
வயல்வெளி என்பதால் தீயணைப்பு வாகனங்கள் வருவதற்கோ அல்லது இருசக்கர, வேறு வாகனங்கள் வருவதற்கோ இயலவில்லை. அதனால் மனிதர்களின் உதவியோடு 2 கிலோ மீட்டர் வரை நடந்து வந்து தண்ணீரை உறுஞ்சும் இயந்திரங்களை கொண்டு வந்து 60 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள், 25 அடி ஆழமுள்ள தண்ணீரை மோட்டார்கள் வைத்து எடுத்து கொண்டிருக்கிறார்கள்.
மீட்பு பணி தொடர்ந்து 13 மணி நேரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது இருப்பினும் விவசாய கிணற்றில் தண்ணீர் அதிகமாக இருப்பதாலும், மோட்டார் அறை சுவர் இடிந்து விழுந்ததாலும், கிணற்றை சுற்றி நிற்கக்கூடிய கிணற்று வட்டைகள் எனப்படும் சுற்று சுவர்கள் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாலும், தற்போது அப்பகுதியில் மழை பெய்து வருவதாலும் மீட்பு பணியில் தாமதம் ஏற்படுவதாகவும் மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் சத்தியகீர்த்தி கூறினார்.
இந்த தகவல் அறிந்த தேவகோட்டை கோட்டாட்சியர் பிரபாகரன், மாவட்ட துணை கண்காணிப்பாளர் ஆத்மநாதன், சிங்கம்புணரி வட்டாட்சியர் கயல்விழி உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியை துரிதப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.