மதுரை மேம்பாலம் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்து தொடர்பான விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மதுரை புது நத்தம் சாலையில் தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் கட்டப்பட்டு வரும் மேம்பாலத்தின் அருகேயுள்ள இணைப்பு பாலத்தின் ஒரு பகுதி கடந்த ஆக.28 மாலை இடிந்து விபத்திற்கு உள்ளானதில், ஒரு தொழிலாளர் உயிரிழந்தார்.
இந்த விபத்து தொடர்பாக இதுவரை மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.மேம்பாலப் பணிகளை மேற்கொள்ளும் மும்பையை தலைமையிடமாகக் கொண்ட JMC projects இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் திட்ட பொறுப்பாளர் பிரதீப் குமார் ஜெயின், கட்டுமானப்பணிகள் பொறியாளர் சத்தியேந்தர் வர்மா, ஹைட்ராலிக் மெஷின்கள் ஒப்பந்த நிறுவனத்தின் பொறுப்பாளர் பாஸ்கரன் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.
விபத்திற்கான காரணம் குறித்து திருச்சி தேசிய தொழில்நுட்ப கழக பேராசிரியர் பாஸ்கர் தலைமையிலான குழு ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும் என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்திருந்தார்.
அதன்படி, திருச்சி தேசிய தொழில்நுட்ப கழக பேராசிரியர் பாஸ்கர் தலைமையில் 3 வல்லுனர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்ட்டது. குழுவில், கேரளாவை சேர்ந்த NATPAC என்ற கட்டுமான நிறுவனத்தின் போக்குவரத்து நுட்ப பொறியாளர் சாம்சன் மாத்தீவ் மற்றும் டெல்லியை சேர்ந்த மேம்பால கட்டுமான ஆலோசகர் அலோக் டோமிக் ஆகியோர் இடம்பெற்றனர். இந்நிலையில் தற்போது இந்த மேம்பாலம் விபத்து தொடர்பான விசாரணை அறிக்கை திருச்சி என்ஐடி குழுவினர் மாநில நெடுஞ்சாலை துறை மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.